சீனாவிடம் இருந்து விலகுகிறோம்- மங்கள
இலங்கை அரசாங்கம் சீனா தொடர்பான வெளிவிவகார கொள்கையை மீள் பரிசீலனை செய்யவுள்ளதாகவும் ஏனைய நாடுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முனைவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள மங்கள சமரவீர ´NHK´ என்ற ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு கூறியுள்ளார். ஜப்பான் 2009ம் ஆண்டு காலத்தில் இலங்கைக்கு பாரிய உதவிகளை புரிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் சீனாவிடம் இருந்து கிடைத்த உமவிகள் ஊழல் மோசடிகளால் வீணாகியதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். அதன் காரணமாக சீனா இலங்கையில் முன்னெடுத்த பாரிய அபிவிருத்தித் திட்டமான கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான வழிமுறைகள் இன்றி குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட மாட்டாதென மங்கள சமரவீர கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் மிதவாத இராஜதந்திர உறவை பேண விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
உலக மகா யுத்தத்தின் பின் ஜப்பான் உலகின் வலுவான நாடாக வளர்ந்துள்ளதெனவும் யுத்தத்திற்கு முகங்கொடுத்த இலங்கைக்கு இது ஒரு நல்ல பாடம் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நட்பு நாடான ஜப்பான் இலங்கைக்கு மேலும் உதவி செய்து முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும் என மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவை என சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் கடன்கள் முதலீடுகள் என்பன அபிவிருத்திப் பணிகளுக்கு மட்டுமன்றி, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் முக்கிய எதுவாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன ஊடகமொன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றதாகவும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு காத்திரமான பங்களிப்பு வழங்கப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
1952ம் ஆண்டு சீன - இலங்கை அரிசி ஒப்பந்தம் இலங்கையின் அபிவிருத்திக்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் சீனா இலங்கைக்கு கடன்களை வழங்கியதுடன் முதலீடுகளையும் செய்திருந்ததாகவும் அதன் பின்னர் நாட்டில் பாரியளவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.








