Breaking News

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 149 மில்லியன் ரூபா கொடுத்த சீன நிறுவனம் – விசாரணையில் அம்பலம்

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்காக சீன நிறுவனம் ஒன்று 149 மில்லியன் ரூபாவை வழங்கியது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு- மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் கடந்த ஆண்டு 149 மில்லியன் ரூபாவை வழங்கியது தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.

சீன துறைமுக பொறியியல் நிறுவனமே இலங்கையில், மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டது. இது சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்தின் அனைத்துலக ஒப்பந்த நிறுவனமாகும்.

சீன நிறுவனத்திடம் இருந்து, 2014 டிசெம்பர் 14, 2015 ஜனவரி 07 ஆகிய நாட்களில் மூன்று காசோலைகள் மூலம், 89 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதை குற்றப்புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளது. இந்தப் பணம், அலரி மாளிகையில் தேர்தல் நடவடிக்கைகளைக் கையாண்ட ஹேமா மடிவெல என்பவரிடம் கையளிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இவர் அதனை மகிந்த ராஜபக்சவின் படம் பொறித்த 245,000 ரிசேட்களையும், 125,000 தொப்பிகளையும் வாங்க பயன்படுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவின் படம் பொறித்த ரிசேட்கள், தொப்பிகள், கைக்கடிகாரங்கள் என்பன வாக்காளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.

அதேவேளை மற்றொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட வங்கிக்கணக்கிற்கு 58 மில்லியன் ரூபா பணம் இரண்டு காசோலைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் கூட ஹேமா மடிவெலவிடமே கையளிக்கப்பட்டுள்ளது என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.