Breaking News

இலங்கை இனப்பிரச்சனை தீர புதிய அரசியல் சாசனம் தேவை: மங்கள சமரவீர

இலங்கையில் அனைத்து சமூகத் தினரும் இணைந்து வாழ புதிய அரசியல் அமைப்பு ஒன்று தேவை என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நாட்டில் தற்போது இருக்கும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் காண முடியாது என்றும், புதிய அரசியல் சாசனம் ஒன்றின் மூலமே அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழ வழி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, இந்நாட்டில் வாழும் சிங்கள, முஸ்லிம், தமிழ் மற்றும் பரங்கியர் அனைவரும் இலங்கையர்களாக வாழக் கூடிய, இலங்கையர்கள் எனும் அடையாளத்தை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியப்படும்" என அவர் கூறுகிறார்.

நாட்டில் சிறுபான்மையினரும் ஆட்சி அமைப்பில் சில முடிவுகளை எடுக்கக்கூடிய வகையிலும் அவர்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய வகையிலும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அப்படியான அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை அனைத்து இனத்தவருடனும் பகிர்ந்துகொள்ளக்கூடியதாக அந்த தீர்வு அமைந்திருக்க வேண்டும் எனவும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கூறுகிறார்.

அப்படியானதொரு சூழலில் பல்லினத் தன்மையுடன் அனவரும் தாங்கள் இலங்கையர் என்பதை உணர்ந்து பெருமையுடன் வாழமுடியும் எனவும் அவர்  தெரிவித்தார்.