கிளிநொச்சி முச்சக்கர வண்டி சங்கத் தேர்தல்! மேன் முறையீடு நிராகரிப்பு
கிளிநொச்சி முச்சக்கர வண்டி சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கொன்றில், அந்தத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கிளி.மாவட்ட நீதிபதி ஜனாப் வகாப்தீன் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை யாழ். சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அத்துடன், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளதுடன், அந்தத் தேர்தலை கிளிநொச்சி நீதிமன்றப் பதிவாளர் தலைமையில் உடனடியாக நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனு யாழ்ப்பாணம் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான திருமதி கனகா சிவபாதசுந்தரம், மா.இளஞ்செழியன் ஆகிய இருவர் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என பரிசீலனை செய்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய குழாம், இதனை விசாரணைக்கு ஏற்பதற்கு வலிதான காரணங்கள் இல்லையென தீர்மானித்து, கிளிநொச்சி மாவட்ட நீதவான் வழங்கியுள்ள தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் கிளிநொச்சி முச்சக்கர வண்டிச் சங்கத் தேர்தல் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் வஹாப்தீன் வழங்கியுள்ள தீர்ப்பில் சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றம் தலையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் குழாம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கிளிநொச்சி முச்சக்கர வண்டிச் சங்கத் தேர்தலை, கிளிநொச்சி நீதிமன்றப் பதிவாளர் தலைமையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோரின் குழு நிலையில் உடனடியாக நடத்தி,
புதிய நிர்வாக சபையினரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று யாழ்ப்பாம் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








