ராஜபக்ஷ குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவே அனைத்து செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன
யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ என்ற தனியொரு குடும்பத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்தே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கு ஜனவரி 8 ஆம் திகதி முற்றுப்புள்ளி வைத்தோம். அந்த பயணத்தை தொடர எதிர்வரும் 17 ஆம் திகதி ஐ.தே.முன்னணியை வெற்றிபெறச் செய்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிவில் சமூகத்தை பலப்படுத்தி பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதன் மூலமே மீண்டும் இந்நாட்டில் குடும்ப ஆட்சி தலைதூக்குவதை தகர்க்க முடியுமென்றும் பிரதமர் தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐ.தே.முன்னணியின் தொழில்சார் நிபுணர்களுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
1983 இலும் யுத்தக் காலத்திலும் நாடு பின்னடைவைக் கண்டது. மக்கள் கஷ்டப்பட்டனர். ஆனால் இவையனைத்திலும் இருந்து மீட்சி பெற்று பொருளாதார ரீதியாக நாட்டை கட்டியெழுப்பவும் மக்களை முன்னேற்றுவதற்கும் சந்தர்ப்பம் யுத்தம் முடித்த பின்னர் கிடைத்தது.
ஆனால் நாட்டையும் மக்களையும் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்வதை முழுமையாக கைவிட்ட மஹிந்த ராஜபக் ஷ தனது சகோதரர்களையும் குடும்பத்தையும் முன்னேற்றுவதை அடிப்படையாக வைத்தே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். நாட்டையும் மக்களையும் நடுத்தெருவில் கைவிட்டார்.
இதிலிருந்து கடந்த ஜனவரி 8 ஆம் திகதி சிவில் சமூகம் தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் இணைந்து நல்லாட்சிக்கான புதிய புரட்சியை ஏற்படுத்தினோம். அதன் பின்னர் மைத்திரிபால சிறிசேனவை நாட்டின் ஜனாதிபதியாக்கி நல்லாட்சியை தொடர்ந்தோம். அந்த நல்லாட்சியின் இரண்டாம் கட்ட பயணம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்காக மீண்டும் நாம் இங்கு இன்று ஒன்றிணைந்துள்ளோம்.
60 மாதங்களில் புதிய நாட்டை கட்டியெழுப்பும் எமது திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பு மீண்டும் எமக்கு தேவையாகும். தெற்காசியாவில் முதன்முறையாக எமது நாட்டில் சமூக பொருளாதார சந்தை வாய்ப்பு பொருளாதார கொள்கையை எமது திட்டத்தில் முன்வைத்துள்ளோம்.
இக்கொள்கையோடு புத்தர் போதித்த லெச்சவி ஆட்சி முறையையும் இணைத்து எமது எதிர்கால ஆட்சி அமையும். நாசிவாதத்தின் பின்னர் கிறிஸ்தவ சக்திகளால் இப்பொருளாதார முறை உலகில் முன்னெடுக்கப்பட்டது.
இன்று தெற்காசியாவில் இந்து முஸ்லிம் மதங்களுக்குள்ளும் இந்த ஜனநாயக மரபுகளுடனான பொருளாதாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னரான பாராளுமன்றம் அரசியல்வாதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் அதனை அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு சபையாக மாற்றுவதே எமது கொள்கையாகும்.
இதற்காக கூட்டுக்கிராமங்களை உருவாக்கி சிவில் அமைப்புக்களை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆட்சியை முன்னெடுக்க ஆலோசனைகள் பெறப்படும். இதன் மூலமே எதிர்காலத்தில் தனிக்குடும்ப ஆட்சி நாட்டில் தலையெடுக்காது தடுக்க முடியும். அமெரிக்காவில் இங்கிலாந்தில் ஐரோப்பிய நாடுகளில் எந்தவிதமான ஆட்சி முறைகள் பின்பற்றப்பட்டாலும் பலமுள்ள சிவில் சமூகங்களை இதனோடு இணைத்து ஆட்சி முன்னெடுக்கப்படும். சிவில் அமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டிய அதேவேளை திறமையான நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட வேண்டும்.
மகா ராஜாவை சுற்றி சுற்றி வருவதால் ஆட்சியில் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்காது என்பது தான் உண்மையாகும் என்றார்.








