இலங்கையில் குற்ற விசாரணை தொடர்பில் புதியதொரு அத்தியாயம்!
பிரபல றகர் வீரா் வசீம் தாஜூதினின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கை குற்ற விசாரணை தொடர்பில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் செயற்பாடாக அமையும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. குற்றச் செயல்கள் குறித்து விசாரணை மேற்கொள்பவர்கள் அச்சம் காரணமாக குற்றங்களை மூடிமறைப்பது மிகப்பெரிய தவறு என்றும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சி பணிப்பாளர் பசில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாரிய குற்றச் செயல்கள் தொடர்பிலான பல விசாரணைகள் கிடப்பில் போடப்பட்ட நிலைமை நீடித்து வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொலைகள், கொள்ளைகள், காணாமல் போதல்கள்,மற்றும் கடத்தல்கள் போன்ற சம்பவங்கள் குறித்து இதுவரை விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவங்களுடன் அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் உறவினர்கள் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டால் விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லசந்த விக்கிரமதுங்க, நடராஜா ரவிராஜ் மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் உள்ளிட்ட பல சம்பவங்களை இதுபோன்று பட்டியலிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல் விசாரணைகள் பிரிவினைவாதமாகவோ, அரசியல் கட்சிகளின் தேவையாகவோ உற்றுநோக்கப்பட கூடாது அது நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வசீம் தாஜூதின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் சரியான திசையில் நகர்வதாக உணர்வதாகவும், இந்த முனைப்பு உரிய முறையில் தொடர்ச்சியாக முன் நகர்த்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








