சீனாவில் வெடிவிபத்து 17 பேர் பலி! 400 பேர் காயம்!
சீனாவில் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர் என்றும் 400இற்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு சீனாவின் தியான்ஜின் துறைமுகத்தில் இரட்டை வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. துறைமுகத்தில் இருக்கும் பண்டகசாலையில் இருந்த கொள்கலன்களில் எளிதில் தீப்பிடிக்கும் மற்றும் வெடிபொருட்கள் இருந்துள்ளன. இப்பகுதியிலேயே வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். 400இற்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்களில் 32 பேரது நிலையானது மிகவும் மோசமாக உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
பண்டகசாலையில் மிகவும் ஆபத்து நிறைந்த பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11:20 மணியளவில், ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து இந்த வெடிவிபத்து நிகழ்ந்து உள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியே பகல்போல் காட்சி அளித்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். துறைமுக பண்டகசாலையில் ஏற்பட்ட தீவிபத்தானது அருகில் இருந்த நிறுவனங்களுக்கும் பரவியுள்ளது.
பண்டகசாலையில் இருந்த கொள்கலன்களில் எளிதில் தீப்பிடிக்கும் மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்கள் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று அந்நாட்டு செய்தி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.








