மகிந்தவின் தோல்வி எழுதப்பட்டு விட்டது!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்வி அவரது நெற்றியில் எழுதப்பட்டு விட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மகிந்தவின் தோல்வி அவரது நெற்றியில் எழுதப்பட்டு விட்டது. அவருக்கு பிரதமராகும் பலமில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.
இரண்டாக பிரிந்து கிராம மட்டத்தில் வாக்கு சேகரிக்கின்றனர். மற்றைய தரப்புக்கு வாக்களிக்க வேண்டாம் என சிலர் பகிரங்கமாக கூறுகின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் மோதல் உருவாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் 113 ஆசனங்களை கைப்பற்றி தனியாக அரசாங்கத்தை அமைக்க முடியாது. மக்கள் இதனை தீர்மானித்து விட்டனர். அங்குமிங்கும் தாவுவோரை பயன்படுத்தியே அரசாங்கத்தை அமைக்க முடியும்.
எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் தாவல்கள் அதிகரிக்கும். கட்சி மாறியே அடுத்த அரசாங்கம் அமைக்கப்படும் என்பதை நாங்கள் தெளிவாக கூறுகின்றோம். கூட்டு அரசாங்கம் அடுத்து அமையும். இதனால், எதிர்க்கட்சியின் பலத்தை அதிகரிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி மக்களிடம் கோருகிறது. நாட்டை சரியான வழிக்கு இட்டுச் செல்லும் பலம் மக்கள் விடுதலை முன்னணிக்கே கிடைக்கும். மக்களும் இதனையே எதிர்ப்பார்க்கின்றனர் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.








