இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பிலான அறிக்கை தொடர்பில் அறிந்திருக்கவில்லை - ஐ.நா
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதைகள் தொடர்பலான அறிக்கை தொடர்பில் அறிந்திருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
எனினும் அனைத்து வகையான சித்திரவதைகளையும் ஐ.நா வன்மையாக எதிர்ப்பதாக அந்த அமைப்பின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நியுயோர்க்கில் இடம்பெற்ற நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சித்திரவதைகளில் இருந்து விடுதலை (Freedom From Torture) என்ற அமைப்பு கடந்த வியாழக்கிமை குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.
சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட பல இலங்கையர்கள் கட்டாயமாக பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதோடு, அவர்களது புகலிடக்கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 148 சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ள அந்த அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னரும் இலங்கையில் தொடர்ச்சியாக சித்திரவதை சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், காவல்துறையினரும் படையினரும் சித்திரவதைகளை மேற்கொள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சித்திரவைதைகள், தாக்குதல் மேற்கொள்ளல், எரியூட்டுதல், கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம், மூச்சுத்திணறல், மின் அதிர்ச்சி மற்றும் படு கொலை செய்தல் போன்ற வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டதோடு, அவைகைளில் 70 வீதமானவைகள் தனிச்சிறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








