தேர்தலுக்குத் தயார் நிலையில் இராணுவம்
இலங்கையில் வரும் 17ஆம் திகதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பாதுகாப்பு வழங்கத் தயார் நிலையில் இருக்குமாறு இலங்கை இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் பிற இடங்களில் உள்ள இராணுவ முகாம்களின் பொறுப்பதிகாரிகளுக்கு, இலங்கை இராணுவத் தளபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இலங்கை காவல்துறையினர் கோரிக்கை விடுத்தால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தயார் நிலையில் இலங்கை படையினர் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
அதேவேளை தேவைப்பட்ட உதவத் தயார் நிலையில் இருக்குமாறு இலங்கை காவல்துறை தரப்பில், இராணுவத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் முழுப் பொறுப்பையும் காவல்துறை ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை காவல்துறையினருக்கு உதவியாக, 7000 சிவில் பாதுபாப்புப் படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதேவேளை, கேந்திர முக்கியத்துவம்மிக்க இடங்கள், வன்முறைகள் நடக்க வாய்ப்புள்ள பதற்றமான இடங்களில் சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்படவுள்ளனர். குருநாகல, தங்காலை, நுகேகொட, புத்தளம் உள்ளிட்ட இடங்களிலேயே சிறப்பு அதிரடிப்ப்படையினர் நிறுத்தப்படவுள்ளனர்.








