Breaking News

உள்நாட்டு பொறிமுறை தமிழருக்கு நியாயமான தீர்வைத் தராது! ஜனாதிபதிக்கு மகஜர்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும், யுத்த பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு, உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் சர்வதேச காணாமல் ஆக்கப்படுதலுக்கெதிரான தினத்தில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த மகஜரில்,

ஆவணி 30ம் நாள் 2015ம் ஆண்டு சர்வதேச காணாமல் ஆக்கப்படுதலுக்கெதிரான தினத்தன்று மன்னாரில் கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஒன்று கூடலின் போது ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பமனு.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும், யுத்த பாதிப்புள்ளாக்கப்பட்டு உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த நாம் எமது துயரங்களை, இழப்புக்களை அதன் துன்பங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

நாட்டின் புதிய தலைமை புதிய பாராளுமன்றம் ஆகியவை எமது துயரங்களை கருணையோடு புரிந்துகொண்டு எமக்கு ஆவண செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த விண்ணப்பத்தை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

ஓர் உள்நாட்டு பொறிமுறையோ அல்லது உள்நாட்டின் கூட்டுப்பொறிமுறையோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வைத் தரும் என்பதில் நம்பிக்கை இல்லை என்பதை தங்களுக்கு பொறுப்போடு தெரிவிப்பதற்காகவே இவ்வறிக்கையைச் சமர்ப்பிக்கின்றோம்.

சர்வதேச பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையின் மூலமே இதற்கான ஒரு தீர்வை எட்ட முடியும் என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம்.

மார்ச் மாதம் 31ம் திகதி 2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட �சிறிலங்காவின் நிகழ்வுகளுக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாக ஐ.நாவின் விற்பனர்களின் குழு அறிக்கையின்படி நாட்டு மக்களின் உரிமைகள் மீறப்படுவதில் அந்நாட்டு அரசின் பொறுப்பு, செயற்பாடு என்பவற்றை ஏற்றுக்கொள்ளல். அந்நிகழ்வுகளுக்கு பொறுப்பு கூறலுக்கு அவசியமாகிறது, என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு நாடு தானே சர்வதேச ரீதியிலான குற்றங்களை அரங்கேற்றும் போது அந்நாடு அக்குற்றங்களுக்கான நீதி கோரப்படும் சர்ந்தப்பங்களில் அதன் நீதி வழங்கும் நிர்வாக அமைப்பில் அங்கம் பெற முடியாது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நீதி நியமங்களுக்கு அமைவாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் தன் சொந்த வழக்கில் நீதிபதியாக இருக்க முடியாது.

கீழே குறிப்பிடப்படுகின்ற முரண்பாடு சிறிலங்காவின் ஓர் இனம் சார்ந்த பாகுபாடாகும். ஒரு நாடு அதன் இனம் சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்றும் போது பாகுபாடற்றதாகச் செயற்படவேண்டும்.

எப்படியிருப்பினும் இலங்கை வரலாற்றுப் பதிவுகளின்படி இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்றுவரை நீதித்துறையும் சேர்ந்து பாகுபாடற்ற தன்மையை தோற்றுவிப்பதில் தவறியுள்ளன.

தமிழர்களுக்கெதிரான குற்றங்கள் இழைக்கப்படும் போது நீதித்துறை எப்போதும் அரசியற் தலைமைகளுக்கு துணைபோவதாக இருந்து உள்ளது. இது கடந்தகால ஆணைக்குழுவின் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.OISL அமைப்பின் செயற்பாட்டு வரம்பு, போர்க்குற்றங்களோடு மட்டும் எல்லைப்படுத்தப்படவில்லை. பிற சர்வதேச குற்றங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் (Rome Statute of international crime Article V) உப விதி 5இன் படி இன அழிப்பு, மனிதத்திற்கு எதிரான குற்றங்கள், ஆக்கிரமிப்புக்கள் என்பனவற்றிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 1948 இல் நடாத்தப்பட்ட இன அழிப்புக்கு எதிரான மகா நாட்டின் 11 கூறு இவ்வாறு விபரிக்கிறது.

இன அழிப்பு என்பது: ஒரு தேசம், இனம், சாகியம் அல்லது மதம் சார்ந்த மக்களுக்கு அல்லது மக்களின் ஒரு பகுதியினருக்கு எதிராக அரங்கேற்றப்படும் அழிவுகளையும் குறிக்கும். இந்த விளக்கத்தின் படி இன அழிப்பு சிறிலங்காவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.சிறிலங்கா என்ற நாடு முற்றுமுழுதாக சிங்கள இனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது.

இவர்களால் இழைக்கப்படுகின்ற தமிழர்களுக்கெதிரான எந்த இன அழிப்புக்களோ வேறு எந்த குற்றங்களேர் உள்;ர் பொறிமுறையினாலோ அல்லது இனங்களின் கூட்டுப் பொறிமுறையினாலோ தீர்த்து வைக்க முடியாது.

எனவே உள்நாட்டை சாராத சுதந்திரமான சர்வதேச பொறிமுறை ஒன்று நியாயமான தீர்வை ஒன்றை அடைவதற்கு (உபவிதி எல்லைப்பரப்பிற்கு அடங்கியுள்ளபடி மிகமிக அவசியம் என கருதுகின்றோம்)

புதிய நிவர்வாக, அரசியல் தலைமை மாற்றம் தண்டணைகளிலிருந்துது தப்பிக்கொள்ள வழியாக்கி தந்துவிடலாம் என்ற எண்ணக்கருவும் சில பகுதிகளில் நிலவுகின்றது. தமிழர்கள் பல ஆட்சி மாற்றங்களை, இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ஆண்டுகளிலிருந்து கண்டுள்ளனர்.

ஆனால் எந்த ஆட்சியுமோ தமிழர்களின் துன்பம் கலந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த முயற்சியையும் இதய சுத்தியோடு மேற்கொள்ளவில்லை என்பதுதான் யதார்த்தம்.

இராணுவத் தலைமை அதிகாரியாயிருந்த திரு. சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு படைகளின் அதிஉயர் பதவி (Field Marshal) வழங்கப்பட்டதும் மிக மோசமான 57வது படைப்பிரிவின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவர்களுக்கு படைத்தரப்பினரின் தலைமைப் பதவி வழங்கப்பட்டதும் (இவர்கள் இருவரும் மிகப் பயங்கரமான சர்வதேச குற்றங்களை புரிந்தவர்கள்).

பாதிக்கப்பட்டோரின் கன்னத்தில் அறைந்தது மட்டுமல்ல OISL இன் கன்னத்தில் அறைந்ததிற்கு சமனாகும். இது சிறிலங்கா நாட்டினால் எதிர்பார்க்;கப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான சவாலுமாகும்.

சர்வதேச சுதந்திர குழுவின் கௌரவ உறுப்பினர்கள் பங்கு கொண்ட விசாரணைக்குழு உட்பட சிறிலங்காவின் எந்தவொரு உள்ளக விசாரணைப் பொறிமுறையும் எவ்வித பலனையும் தரவில்லை.

பொறுப்புக் கூறலும் நீதியும்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கான பார்வையில் சர்வதேச தர நெறிமுறைகளுக்கு அமைய சுதந்திரமான பங்களிப்பை செய்வதற்கு உதவியாய் அமையும்.

இதற்கு மேலதிகமாக தமிழர் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் இன்னும் நிலை கொண்டிருக்கும் இராணுவ மையங்களும் வடக்கு கிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இராணுவ மயமாக்கலும் தமிழர்களுக்கு பயத்தையும், அச்சுறுத்தலையும் வழங்கிக்கொண்டேயிருக்கும்.

கடந்தகால நாட்டின் வரலாற்றையும் அரசியலையும் நோக்கும் போது நாட்டில் ஏற்படுத்தப்படும் உள்வாரியான அல்லது இரு பகுதியினரும் இணைந்த பொறிமுறை ஒன்று எந்த வகையிலும் எதிர்பார்க்கின்ற தரத்தை எட்டமுடியாது. ஆகவே ஐ.நா வினால் ஒழுங்கு படுத்தப்படும் ஒரு பொறிமுறையே பொருத்தமானதாக அமையும்.

பிரச்சினைகளை தீர்க்கும் ஆவல் கொண்ட ஒரு தேசம் தன்னிடம் நீதி வழங்கக் கூடிய தகுதி நிலை அற்றிருக்கும் போது இனம் சார்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய நீதிமன்று ஒன்று பயனுடையதாக இருக்காது. சிறிலங்காவின் அரசியற் தலைமைகளை குற்றஞ்சுமத்தவோ அல்லது தழிழர்களுக்கு நீதியை வழங்கும் ஆர்வமோ அரசியல் ரீதியாக இல்லை.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கூட தென்னிலங்கை வாக்காளர்களுக்கு கூறும்போது இவ்விதம் கூறினார் �நாம் ஒரு உள்ளக விசாரணையை ஏற்படுத்தி படையினரின் பெயர்களை விடுவித்து விடுவோம்� விளைவுகள் பொறுப்பு கூறல்களுக்கு எதிராகவும், அடைய உத்தேசிக்கப்படுகின்ற நம்பிக்கை, வன்முறைகள் தலைதூக்காமை, குணமாக்கல்கள், சமாதானம் என்பவற்றிற்கு எதிராகவும் அமைந்து விடும்.

இலங்கையில் இயங்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான அமைப்பு நடாத்திய ஆய்வின்படி 84 வீதமான தமிழர்கள் ஒரு சர்வதேச விசாரணையே வேண்டும் என கோருவதாலும் உள்ளூர் பொறிமுறையோ அல்லது இணைந்த பொறிறையோ பிரச்சினைகளுக்கு ஒரு நீதியான சமாதானத்தை கொண்டு வராது என்பதனாலும் சர்வதேச விசாரணையைச் சிபாரிசு செய்ய கோருகின்றோம்.

சிறிலங்காவின் உள்ளக விசாரணை அல்லது இணைந்த பொறிமுறை இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு, போர் குற்றங்களுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு மற்றும் காணாமற்போன எமது உறவுகளுக்கு நீதியையோ, தீர்வையோ பெற்றுத்தர முடியாது, ஆகவே சர்வதேச தரத்திலான விசாரணையே எங்களுக்கு வேண்டும் என கீழே கையொப்பமிடும் நாங்கள் அனைவரும் கேட்டு நிற்கின்றோம்.