Breaking News

தேசிய அரசாங்கம் குறித்த சட்டமூலம் சட்டவிரோதமானதாம்! விமல் கூறுகிறார்

புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான மசோதா சட்டவிரோதமானது என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள விமல் வீரவங்ச, புதிய அரசாங்கம் தனது பெயரை தேசிய அரசாங்கம் என்று மாற்றிக் கொண்டு அமைச்சரவையை விரிவாக்கிக் கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற சட்டமூலமொன்றை கொண்டு வரவுள்ளது. இது அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்துக்கு முரணானது.

ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பி.யும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் கொண்டுவரவுள்ள இந்த சட்டமூலம் அரசியலமைப்பு விதிகளை மீறுவதுடன், அதன் ஓட்டைகளில் புகுந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினரை அமைச்சர்களாகவும், மறு பிரிவினரை எதிர்க்கட்சி உறுப்பினர்களாகவும் பிரித்து அரசியல் நாடகமொன்றை ஆடிக்கொண்டிருக்கின்றார். இந்த இரட்டை வேடம் செல்லுபடியாகாது. இவர்கள் இணைந்து அமைக்கவுள்ள அரசும் தேசிய அரசாங்கமாக இருக்காது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.