வடக்கு, கிழக்கை இணைக்கும் புலிகளின் வேலைத்திட்டத்தை ரணில் அன்றும் இன்றும் முன்னெடுத்து வருகின்றார்
வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் புலிகளின் வேலைத்திட்டத்தை ரணில் அப்போதும் முன்னெடுத்தார். இப்போது முன்னெடுக்கின்றார்.
பிரபாகரன் இல்லாவிட்டாலும் அவரது இடத்தை பிரதமர் ரணில் நிரப்புகின்றார் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். ரணில் மீதுள்ள நம்பிக்கையில் தான் சம்பந்தனும், சர்வதேசமும் ரணிலை ஆட்சிக்கு கொண்டுவர முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் தொடர்புகள் குறைவடைந்திருக்கும் நிலையில் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
பிரிவினைக்கு அப்பால் ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரே எதிர்பார்ப்பாகும். கடந்த காலத்தில் எமது செயற்பாடுகள் அனைத்தும் அவ்வாறே அமைந்திருந்தது. குறிப்பாக யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்தோம். வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அப்பால் தமிழ், சிங்கள உறவுமுறையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். ஆனால் அபிவிருத்திகளை செய்ய முடிந்த எம்மால் தமிழ் சிங்கள உறவுமுறையை கட்டியெழுப்புவதில் வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய சில காரணங்களும் உள்ளன.
அதாவது யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் தமது சாதாரண நிலைமைக்கு வர சில காலம் எடுத்தமை உண்மையே. ஆனால் மக்கள் சாதாரண நிலைமைக்கு வரக்கூடிய வகையில் வடக்கின் சூழல் அமைந்திருக்கவில்லை. பொது மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க நீண்டகாலம் தேவைப்பட்டது. விடுதலைப்புலிகள் தமது ஆதிக்கத்தின் கீழ் வடக்கை வைத்திருந்த வேளையிலும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் அவர்களால் வடக்கில் விதைக்கப்பட மிதிவெடிகள் அனைத்தையும் அகற்றவே எமக்கு நீண்டகாலம் எடுத்தது. அதேபோல் அப்பகுதி மக்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவும் காலம் தேவைப்பட்டது. இந்தச் செயற்பாடுகளினால் எமக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்புகள் சற்று விரிசலாக இருந்தது.
அதைவிடவும் முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளும், புலம்பெயர் அமைப்புகளும் தமிழ் மக்களை பிரிவினைவாதத்தின் பக்கம் கொண்டுசென்றுவிட்டனர். சிங்கள மக்களை வடக்கில் நெருங்கவிடாத நிலைமையை உருவாக்கி விட்டனர். ஆகவே எமது ஆட்சியின் போது நாம் தமிழ் மக்களை நெருங்காதமைக்கு இவையே காரணமாகும்.
ஆனால் எமது ஆட்சியில் எம்மால் இயன்ற அளவு தமிழ் முஸ்லிம் மக்களை ஆதரித்து செயற்பட்டோம். ஆனால் இப்போது நிலைமை அவ்வாறு அமையவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை நம்பி வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றப்பட்டுள்ளனர். நாம் எப்போதும் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராகவே உள்ளோம். ஆனால் தமிழ் மக்கள் எம்மை ஆதரிக்க வேண்டும். ஆனால் நாம் ஆட்சியை அமைத்தவுடன் பிரிவினை இன்றி அனைத்து மக்களின் மனங்களையும் வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டம் எப்போதுமே சர்வதேசத்தை பலப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளது. 2002 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்த வேளையிலும் சர்வதேச தேவையை பூர்த்திசெய்யும் வகையில் விடுதலைப்புலிகளை பலப்படுத்தும் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் புலிகளின் வேலைத்திட்டத்தை ரணில் முன்னெடுத்தார். அதேபோல் இப்போதும் ஐக்கியதேசியக் கட்சி சர்வதேச எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் புலிகளின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். பிரபாகரன் இல்லாவிட்டாலும் அவரது இடத்தை ரணில் நிரப்புகின்றார். அதன் காரணத்தினாலேயே சம்பந்தனும், சர்வதேசமும் ரணிலை ஆட்சிக்கு கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.
சிங்கள மக்களின் பாதி வாக்குகளை விடவும் சற்று குறைவாக ஐக்கிய தேசியக் கட்சி எடுத்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்க முடியும். அந்த நம்பிக்கையில் தான் ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய கட்சிகளை விலைக்கு வாங்கி சிங்கள வாக்குகளை பலப்படுத்த முயற்சித்து வருகின்றது. குறிப் பாக மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயகக் கட்சிகளின் உதவியுடன் சிங்கள் வாக்குகளை கைப்பற்ற ரணில் திட்டம் தீட்டியுள்ளார். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்த வேண்டு மாயின் சிங்கள மக்கள் அனைவரையும் எம்பக்கம் எடுக்க வேண்டும். அதேபோல் இந்த நாட்டில் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அனைத்தையும் தோற்கடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார் .








