Breaking News

பரீட்சை நிலையங்களுக்கு அருகில் தேர்தல் பிரசாரங்களுக்கு தடை

பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாமென இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தாமல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘இவ்வாண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை வழமைபோன்று இம்மாதம் முதல்வாரத்திலே ஆரம்பமாகியுள்ளது.

இக்காலப்பகுதியிலே, பொது தேர்தலும் நடைபெறுவதால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி பரீட்சை நிலையங்களுக்கு அருகில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் அனைத்து வேட்பாளர்களிடமும் அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

நாட்டின் எதிர்கால தூண்களாக கருதுகின்ற மாணவச் செல்வங்கள், எவ்வித இடையூறுகளுமின்றி பரீட்சைக்கு தோற்றுவதை நாம் உறுதிச் செய்யவேண்டும். என்றும் அவர் கூறியுள்ளார்.