ஈழக அகதி தன் மனைவியுடன் தற்கொலை முயற்சி : திருச்சி முகாமில் சம்பவம்
திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழக அகதியொருவர் தனது மனைவியுடன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
25 வயதுடைய மகேஷ்வரன் என்ற நபரும் அவரது மனைவியும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருப்பதாக த ஹிந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வெடிபொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக இவர் கடந்த 2012ஆம் ஆண்டு கியூ பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.இவர் சம்பந்தப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் அவரை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும், அவர் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் விடுதலை செய்யாததனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிய அவர்கள் இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் குறித்த இருவரும் மகாத்மா காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தங்களது விடுதலைக்கும், குடும்பம் என்ற வகையில் சேர்ந்து விடுதலையாக வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மகேஷ்வரன் அனுப்பியிருந்த கோரிக்கை கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.