Breaking News

சமஷ்டிக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: மஹிந்த திட்டவட்டம்

சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதி யுமான மகிந்த ராஜபக்ஷ, 

தமக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் உண்மை என்னவென்பது தெரியவரும்போது அம்மக்கள் மாறுவதற்கு நீண்டகாலம் எடுக்காது என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு ஜெய் ஹில்டன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்த விடயங்களை தெரிவித்தார்.

சமஷ்டி கோரிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ;நாம் அதை ஏற்கமாட்டோம். அதை நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே கூறியுள்ளோம். ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு வாழும் நாட்டையே நாம் உருவாக்க வேண்டும். ஆகையால்தான் இந்த பிரச்சினை பாராளுமன்றம் மூலம்தான் தீர்க்கப்படவேண்டும் என்று நான் அப்போதிருந்தே கூறி வருகிறேன்.

என்னுடன் தனிப்பட்ட ரீதியில் நடத்தும் பேச்சுக்களால் இதைச் செய்யமுடியாது. பாராளுமன்றம் ஊடாகத் தான் இதை தீர்க்க முடியும். அதற்கான முயற்சியாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து செயற்பட்டபோது அதில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

இதேநேரம் உங்களுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் குறைவாக காணப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்;

‘சொல்லப்படுவது போன்று பெரிய இடைவெளி எதுவும் கிடையாது. மதவாத ரீதியாக பொய்ப் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. முஸ்லிம் மக்களை எம்மிடமிருந்து தூர விலக்கி வைப்பதற்காக பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டமை தற்போது வெளிப்படுகின்றது. இதன் உண்மைத் தன்மையை முஸ்லிம் மக்கள் அறிந்துகொண்டதன் பின்னர் அம்மக்கள் மாறுவதற்கு நீண்டகாலம் எடுக்காது’ என்று முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.