Breaking News

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி முகாம் ஒன்றில் சிறைவைப்பு?

தனது கணவர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவத்துடன் தொடர்புடைய, இராணுவ அதிகாரிகளை குற்றப்புலனாய்வுப் பிரிவவிடம் ஒப்படைக்குமாறு, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட, இலங்கை இராணுவத் தளபதியிடம் கோரியுள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் இதுபற்றித் தகவல் வெளியிட்ட சந்தியா எக்னெலிகொட, தனது கணவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, இராணுவ அதிகாரி ஒருவர், கிரிதல, மின்னேரியா அல்லது மட்டக்களப்பில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனது கணவர் காணாமற்போன சம்பவத்துடன் ராஜபக்ச ஆட்சி தொடர்புபட்டிருந்தது. எனது கணவர் காணாமற்போன சம்பவத்துடன் தொடர்புடைய படை அதிகாரிகள் எவரேனும் இருந்தால் அவர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு இராணுவத் தளபதியிடம் கேட்டுள்ளேன்.

மைத்திரிபால – ரணில் அரசாங்கம், விசாரணைகளைத் துவங்கியுள்ள போதிலும், குற்றப்புலனாய்வுத்துறையினர் பிரகீத் காணாமற்போனது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. எனது கணவர் காணாமற்போனது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட வேண்டும்.

ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது கணவர் காணாமற்போனது குறித்து எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. இப்போது அவர்கள், தாம் பதவிக்கு வந்தால் காணாமற்போனது குறித்து விசாரணை நடத்துவோம் என்று கூச்சல் எழுப்புகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.