Breaking News

தாஜூதீன் மரணம் தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் விசாரணை

படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் மரணம் தொடர்பில் கடந்தவாரம் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தாஜூதீன் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு உரிய வாகனம் ஒன்றில் கடத்தப்பட்டிருந்ததாக சிங்களப் பத்திரிகை ராவய கடந்த வாரம் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

குறித்த வாகனம் 2011ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இந்த வருடம் ஜனவரி வரை சிரிலிய சவிய அமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச இந்த அமைப்பின் ஸ்தாபக தலைவியாக செயற்பட்டிருந்தார். இதனையடுத்து குறித்த வாகனம் தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அந்த அமைப்பின் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் தமது அமைப்பினால் வழங்கப்பட்ட வாகனத்தை சிரிலிய சவிய அமைப்பினர் எவ்வாறான விடயங்களுக்கு பயன்படுத்தினர் என்ற விபரம் தமக்குத் தெரியாது என்று செஞ்சிலுவைச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த டிபெண்டர் ரக வாகனம் தற்போது புலனாய்வுப்பிரிவினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.