முதலைக் கண்ணீர் வடிக்கும் ரணில், மஹிந்த
தபால் மூல வாக்களிப்பு தினத்தை இலக்கு வைத்து, முன்னாள் ஜனாதிபதி, குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரச ஊழியர்களை ஏமாற்ற முதலைக் கண்ணீர் வடிப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
கடந்த காலங்களில் அரச ஊழியர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்காத இந்த ஆட்சியாளர்கள் தபால் மூல வாக்களிப்பை இலக்கு வைத்து அரச ஊழியர்களை ஏமாற்ற பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.
ரணிலும் மஹிந்தவும் தற்போது வியாபாரிகள் போன்று கணவுகளை விற்கின்றனர்.
வாக்களிக்கு முன் அரச ஊழியர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் ரணில் ஆட்சியில் அல்லது மஹிந்த ஆட்சியில் இதற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு என்ன செய்தார்கள் என. மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தில் அரச சேவையை வீணடித்தார். அரச சேவைகளை முழுமையாக அரசாங்க பலத்தின் கீழ் கொண்டு வந்தார். அரச பிரிவு முழுமையாக வீழ்ந்தது.
தற்போது மஹிந்த கூறுகின்றார் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை 25,000 ரூபாவாக மாற்றுவதாக, இதைக் கேட்கும் போது எங்களுக்கு சிரிப்பு வருகின்றது.
மேலும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் ஒரு ரூபாயேனும் அதிகரிக்கப்படவில்லை. ஆனால் தற்போது வாக்குகளுக்காக 25,000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவதாக கூறுகிறார். 8 மாதங்களுக்கு முன்னர் ஆட்சியில் இருந்தபோது இதனைச் செய்யாமல் அதிகாரம் இல்லாத போது இது குறித்து பேசுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது அரச ஊழியர்கள் பற்றி அதிகம் பேசுகின்றார். தபால் மூல வாக்களிப்பு காரணமாகவே அவர் இவ்வாறு பேசுகிறார்.