வீழ்ந்த இனமாக எம்மை நாமே ஏமாற்றி வருகின்றோம் – முதலமைச்சர்
இன்று நாம் ஒரு வீழ்ந்த இனமாக எம்மை நாமே ஏமாற்றி வருகின்றோம். அதுபோல் வாழும் இனமாக பெரும்பான்மையினர் உலகிற்குத் தம்மைக் காட்டி வருகின்றார்கள்.
தேர்தலில் தேவையற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நாம் வீழ்ந்த இனத்தினர் அல்ல என்பதை எடுத்துக்காட்டவே சரித்திர ரீதியிலான வெளியீடுகள் விரைவில் வெளிவரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். உண்மை நிலையினை உலகிற்கு கூறும் காலம் தற்பொழுது உதித்துள்ளது. எனினும் இதை நாம் கூறினால் எங்களுக்கு புலிப்பட்டமும், தீவிரவாதப்பட்டமும் சூட்டுகின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்
நல்லூரில் நடைபெற்ற இந்து மாமன்றத்தின் இந்து ஆராய்ச்சி மாநாட்டில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவரின் உரைவருமாறு,
விரைவில் சர்வதேச சரித்திர வல்லுநர் குழுவொன்று இலங்கையின் தமிழ் மக்கள் பற்றியும் மற்றும் இலங்கையில் இந்து மதம் பற்றியும் ஆராய்ந்து ஆதார பூர்வமான வெளியீடொன்றினைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
உள்ளூர் சரித்திராசிரியர்கள் உண்மையை உள்ளவாறு கூறப்பயப்படுகின்றனர் அல்லது வேண்டுமென்றே பிறழ்வாகக் கூறத் தலைப்படுகின்றனர். இன்று பலவிதமான அகழ்வுகளும் கல்வெட்டுக்களும் உண்மையை உலகறியச் செய்யத் துடித்துக்கொண்டிருக்கின்றன.
பௌத்தம் இலங்கைக்கு வரமுன் இங்கு வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன? அவர்களின் பாரம்பரியம் என்ன என்பவை சம்பந்தமாகச் சர்வதேச சரித்திர நிபுணர் குழுவொன்று ஆதாரபூர்வமான வெளியீடு ஒன்றைக் கொண்டு வந்தால் இன்று இந்த நாட்டில் நிலைபெற்றிருக்குந் தவறான முடிவுகள் யாவற்றையும் தூக்கி எறிய வேண்டியிருக்கும்.
அப்பேர்ப்பட்ட குழுவொன்றை நியமிக்க எமது புலம்பெயர்ந்த தமிழ்-இந்து சகோதர சகோதரிகள் முன்வரவேண்டும். முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இன்று இராவணன் ஒரு சிங்களவர் என்று கூறுவார் கூட இந் நாட்டில் உள்ளார்கள்.
சிங்களமொழி எவ்வாறு, எப்போது உதித்தது, அந்த மொழியைப் பேசத் தொடங்கிய பின்னர் தான் அவர்கள் சிங்களவர் என்ற நாமத்தைப் பெற்றார்கள், என்பது பற்றியெல்லாம் எமது மக்கள் ஆராயாது இருந்து வருவதால்த்தான் பெரும்பான்மையினரின் அடக்கு முறை கட்டுக்கடங்காது செயல்ப்படுகின்றது.
உண்மையை உணர்ந்து உரைத்திட நாங்கள் பின்நிற்கக் கூடாது. எனவே ஆராய்ச்சி என்பது மிக மிக முக்கியமாக இன்றைய காலகட்டத்தில்த் தேவைப்படுகின்றது. அதை உணர்ந்து இம்மாநாட்டை இந்து ஆராய்ச்சி மாநாடாக உருவாக்கிய அனைவருக்கும் முதற்கண் எங்கள் நன்றிகள் உரித்தாகுக!
இராமாயணம் கூறும் இலங்காபுரி எமது தற்போதைய இலங்கையோ என்பதில் பல கருத்து வேறுபாடுகள் இருப்பதை நானறிவேன். இராமாயணம் வெறுங் கற்பனைக் கதையா அல்லது உண்மையில் நடந்ததொன்றா எனக் கேள்வி கூட கேட்கப்பட்டு வருவதை நான் அறிவேன்.
ஆனால் நான் கூறவருவது வேறு. மகாவம்சத்தில் அதன் ஆசிரியர் பௌத்தத்தை வளர்க்க ஒரு கற்பனைக் கதையைச் சொல்லப்போய் அக்கதையையே அடிப்படையாக வைத்து இன்று பெரும்பான்மை சமூகத்தினர் சரித்திரத்திற்கு ஒவ்வாத கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
மகாவம்சம் உண்மையில் நடந்தேறிய சம்பவங்களின் பதிவே என்ற விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படியாயின் இராமாயணம் சம்பந்தமான ஆராய்வு எமக்கு எப்பேர்ப்பட்ட முடிவுகளைத் தரவல்லது என்ற கோணத்தில் இருந்து பார்க்குமாறு மதிப்பிற்குரிய எமது சரித்திர ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
மக்கள் மனதிலே வேரூன்றியிருக்கும் சில ஆழ்ந்த மதரீதியான எண்ணங்களை நாங்கள் மாற்ற முடியாது. உதாரணத்திற்கு புத்தர் பெருமான் அவர் காலத்தில் மூன்று முறை இலங்கை வந்தார் என்பதும் பல பிணக்குகளைத் தீர்த்து வைத்துச் சென்றார் என்பதும் எமது பௌத்த மக்கள் நம்பும் விடயங்கள்.
புத்த மதம் இலங்கைக்கு வர முன்னரே புத்தர் இங்கு வந்தார் என்றெல்லாம் கதைகள் கூறப்படுகின்றன. புத்தமதம் இலங்கைக்கு வராத காலத்திலேயே இங்கு வந்தவர் கௌதம புத்தர் தான் என்று எவ்வாறு மக்கள் அடையாளம் கண்டனர் என்பது போன்ற கேள்விகளை எவரும் எழுப்பியுள்ளதாகத் தெரியவில்லை.
புத்தர் காலத்தில் புத்த பகவான் இலங்கை வந்திருந்தால் அவரின் புத்த மதம் மகிந்த தேரோவினால் பின்னைய காலத்தில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது என்று கூறுவது பொருத்தமற்றதாக அமையும். ஏற்றுக்கொள்ளப்பட முடியாத இப்பேர்ப்பட்ட கருத்துக்கள் பல சிங்கள மக்களிடையே இன்று நிலவி வருகின்றன.
அதை எவரும் மாற்ற முடியாது. ஆனால் உண்மையை, உள்ள சான்றுகளின் அடிப்படையில், சர்வதேச நிபுணர்கள் வாயிலாக ஊரறியத் தெரிய வைத்தால் காலக் கிரமத்தில் அவ்வுண்மையை மக்கள் ஏற்க வேண்டி வரும்.
கட்டுக்கதைகளுக்கும் கருத்துள்ள வரலாற்றுக் கதைகளுக்கும் இடையிலான இடைவெளியைப் பொதுமக்கள் காலக்கிரமத்தில் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கின்றது. அண்மையில் நாங்கள் இனப்படுகொலைபற்றிய பிரேரணையை நிறைவேற்றிய போது “விக்னேஸ்வரனா இப்பேர்ப்பட்ட துவேஷம் நிறைந்த ஒரு பிரேரணையை நிறைவேற்றினான்?” என்று எனது சிங்கள நண்பர்கள் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள்.
“சட்ட ரீதியாக இனப்படுகொலையை இவர்களால் நிரூபிக்க முடியாதே? அதுவும் 67 வருடகாலத்தை முன்வைத்து இப்பிரேரணை கொண்டு வரப்பட்டள்ளது. யாரைக் குற்றஞ் சாட்டுகிறார் இவர்? எந்த அரசாங்கத்தைக் குறிப்பிடுகின்றார்? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார்கள்.
அதற்கு நான் கூறிய பதில் – முதலில் உங்களைச் சிந்திக்க வைக்கவே இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தேன். நடந்தவற்றை நீங்கள் உணர்ந்து கொண்டால்தான் எமக்குள் நல்லிணக்கம் ஏற்படலாம். உண்மையைத் தெரிந்து கொண்டால்தான் நாங்கள் செய்த பிழைகளைக் கை விட்டு நல்லிணக்கம் நோக்கி நடக்கலாம் என்றேன்.
அத்துடன் சட்டப்படி இனப்படுகொலையைப் பார்ப்பது ஒரு கோணம். யார் இனப்படுகொலையில் ஈடுபட்டார்கள், அது இனப்படுகொலையா? ஆதாரங்கள் உண்டா, என்றெல்லாம் கேட்பது சட்டரீதியான கேள்விகள்.
நான் குறிப்பிடுவது சமூக ரீதியான விடயங்களை எமக்கு நடந்ததை. இலங்கை பூராகவும் என் இளமைக் காலத்தில் பரந்து வாழ்ந்த தமிழ் மக்களை எவ்வாறு நீங்கள் அடக்கி, துரத்தித் தெற்கை உங்கள் சமூகத்தினர்களுக்கு மாத்திரம் என்று ஆக்கிவிட்டீர்களோ அதைப் பற்றித் தான் நான் குறிப்பிடுகின்றேன்” என்று கூறினேன்.
எமது பிரேரணையை வெளிநாட்டுப் பிற இன மக்கள் வாசித்து அறிந்து இலங்கை நாட்டில் நடந்துள்ளதை அறிந்து வைத்திருக்கின்றார்கள். அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வெள்ளைக்காரர்கள் எமது நிலை பற்றி அறிந்து வைத்திருக்கும் அளவைக் கண்டு நான் பிரமித்து விட்டேன்.
எமக்கு நடந்தது ஒரு புறமிருக்க, எமது பாரம்பரியம் பற்றியும் அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். ஆனால் சரித்திர ரீதியான ஏற்புடைய படைப்புக்களை வேண்டி நிற்கின்றார்கள். அதனை அவர்களுக்குக் கையளிப்பது உங்கள் பொறுப்பு என்று கூறவே எமது இனப்படுகொலை பற்றிய பிரேரணை பற்றி இங்கு பிரஸ்தாபிக்க வேண்டி வந்தது.
இன்று நாம் ஒரு வீழ்ந்த இனமாக எம்மை நாமே ஏமாற்றி வருகின்றோம். அதுபோல் வாழும் இனமாக பெரும்பான்மையினர் உலகிற்குத் தம்மைக் காட்டி வருகின்றார்கள். தேர்தலில் தேவையற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நாம் வீழ்ந்த இனத்தினர் அல்ல என்பதை எடுத்துக்காட்டவே சரித்திர ரீதியிலான வெளியீடுகள் விரைவில் வெளிவரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். உண்மை நிலையினை உலகிற்கு கூறும் காலம் தற்பொழுது உதித்துள்ளது. எனினும் இதை நாம் கூறினால் எங்களுக்கு புலிப்பட்டமும், தீவிரவாதப்பட்டமும் சூட்டுகின்றார்கள்
நான் இங்கு அரசியல் பேசுவதாக எமது சகோதர சகோதரிகள் விசனப்படக் கூடாது. இந் நாட்டின் அரசியலுக்கு அடிப்படையாக அமைந்திருந்ததே எமது வரலாற்றுப் பிறழ்வுகளும் பிழைகளுந்தான். வட-கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினராக இருந்த தமிழ்பேசும் மக்களை மற்றைய ஏழு மாகாணத்தின் மக்களுடன் சேர்த்துப் பார்த்து அவர்களைச் சிறுபான்மையினர் ஆக்கியதே அரசியல் தான்.
1919 ஆம் ஆண்டில் பிரித்தானியர் எம்மை ஆண்ட போது அவர்கள் இன ரீதியாகச் எம்மை நெறிப்படுத்தி, இனங்களுக்கு வேண்டியவற்றைக் கையளிக்க ஆவன செய்தார்கள். இன ரீதியால் செயல்ப்படுவது தவறு பிரதேசவாரியாகச் செயல்ப்பட வேண்டும் என்று சிங்கள மக்கள் தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
நாட்டைப் பிரதேசங்களாகப் பிரித்து அவற்றை அப்பிரதேச மக்களே ஆண்டு வரும் நிலை உருவாக வேண்டும் என்றார்கள். இதனை எமது வடமாகாண மக்கள் எதிர்த்திருந்தாலும் என் தாயாரின் உறவினரான சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் இலங்கையை ஒரு ஒன்றிணைந்த, ஒருமித்த ஐக்கியமுள்ள நாடாக மாற்றுவதென்றால் பிரதேச வாரியான தேர்வுக்கு நாம் இடம்கொடுக்க வேண்டும் என்று அடித்துக் கூறியதால் யாழ். மக்களின் தலைவர் சபாபதி அவர்கள் அவர் கோரிக்கைக்கு இடமளித்தார்.
அதிலிருந்து தான் எமது பிரச்சினைகள் உருவாகின. மிகச் சிறந்த மனிதர் சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம். ஆனால் தன்னைச் சுற்றியிருந்த சிங்களத் தலைவர்களை அவரால் எடை போட முடியவில்லை.
1930ம் ஆண்டுகளில் சிங்களவர் மட்டும் அமைச்சரவையையும் சிங்களத் தலைவர்கள் அமைத்தார்கள். 1956 இல் சிங்களம் மட்டும் சட்டத்தையும் கொண்டு வந்தார்கள். தமிழ் மக்களின் தரமுணர்ந்து அவர்களை ஓரம் கட்ட நினைத்திருந்த சிங்களத் தலைவர்களின் உள்ளெண்ணங்களை உணராது செயற்பட்டார் அருணாச்சலம்.
அவரைப் போலவே பிழைவிட்டவர் இந்தியாவின் முன்னைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள். தாம் இருந்த மலையுச்சியில் இருந்து இறங்கி வரமுடியாத ஒரு நிலையில் அவர் இருந்தார். 1962 இல் சீனா இந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமித்த பின்னர் தான் அவருக்கு ஞானம் பிறந்தது.
ஆகவே எமக்கு எதிரானவர்களின் மனோநிலையையுணர்ந்து செயலாற்ற வேண்டிய ஒரு நிலையில் நாம் உள்ளோம். அவர்களின் செயலாற்றலுக்கு அத்திவாரமாக அமைந்திருப்பது அவர்கள் சித்திரித்துள்ள கட்டுக் கதைகள்.
அவை கட்டுக்கதைகள் தான் என்பதை நாங்கள் சரித்திர ரீதியாக நிரூபித்தோமானால் அவர்களின் அத்திவாரமே உலக அரங்கில் ஆட்டங்கண்டுவிடும். அதற்கு அகில தேச ஆராய்ச்சிக் குழுவின் அறிக்கையானது தேவைப்படுகின்றது. அதனைப் பெறவே சர்வதேச ஆராய்ச்சிக் குழுவை நியமிக்குமாறு வேண்டி நிற்கின்றேன் என அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.