Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6 ,7,8 இல் கிழக்கில் தேர்தல் பரப்புரை

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொள்ளும் முக்கிய பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் இவ்வாரம் நடைபெறவுள்ளன. 

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் குறித்த பரப்புரைக் கூட்டங்களிலும் முக்கிய சந்திப்புக்களிலும் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 6,7,8 ஆம் திகதிகளில் முறையே மூன்று மாவட்டங்களிலும் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டங்களில் கலந்துகொள்ள இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட மேலும் சில உயர்மட்டத் தலைவர்கள் நடைபெறவிருக்கும் பரப்புரைக் கூட் டங்க ளில் கலந்துகொள்ளவுள்ளனர். 

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று வேட்பாளர்களுக்கும் ஒருமித்து ஆதரவு திரட்டும் பரப்புரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

 அதேவேளை, இந்த மாவட்டத்தில் முதன் முறையாக களமிறங்கியுள்ளதும் தனித்துப் போட்டியிடும் கட்சியுமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆரம்பத்திலேயே கிடைத்த மக்கள் வரவேற்பை அடுத்து உற்சாகத்துடன் பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. மேலும், தமிழ்ப் பிரதேசங்களிலும் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. விருப்பு வாக்கு வேட்டைகளுக்கு மத்தியில் கிராமங்கள் தோறும் பரப்புரைக் கூட்டங்களை வேட்பாளர்கள் நடத்தி வருகின்றனர்