வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக விரைவில் யோசித ராஜபக்சவிடம் விசாரணை
இலங்கை ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், இலங்கை கடற்படை அதிகாரியுமான லெப். யோசித ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இலங்கை காவல்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கார் விபத்து ஒன்றில் பலியானதாக கூறப்பட்ட வசீம் தாஜுதீன் சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட பின்னரே திட்டமிட்டு அவரது கார் எரிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
இதையடுத்து. வரும் செப்ரெம்பர் 10ஆம் நாள், இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையை, சமர்ப்பிக்குமாறு சட்டமருத்துவ அதிகாரிக்கு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையிலேயே, இந்தக் கொலை தொடர்பாக, லெப்.யோசித ராஜபக்சவிடம், இலங்கை காவல்துறையினர் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யோசித ராஜபக்சவின் முன்னாள் பெண் நண்பியுடன், வசீம் தாஜுதீன் கொண்டிருந்த நட்பை விரும்பாத நிலையிலேயே, யோசித ராஜபக்ச இந்தக் கொலையை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.