புலிகளின் கடும்போக்கு கொள்கையில் பயணிக்கும் விஜயகலா! கெஹெலிய குற்றச்சாட்டு
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் புலிகளின் கடும்போக்குவாத பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றார்.
அவரின் உரைகளிலிருந்து இதனை நான் புரிந்துகொண்டேன் என்று முன்னாள் அமைச்சரும் ஐ.ம.சு.மு.வின் கண்டிமாவட்ட வேட்பாளருமான கெஹெலிய ரம்புக்வல தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கேசரிக்கு கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரனின் அரசியல் பேச்சுக்கள் சிலவற்றை நான் அண்மையில் செவிமடுத்தேன். புலிகள் இருந்த காலத்தில் வடக்கில் குற்றச்செயல்கள் இருக்கவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ளதாகவும் எனவே பொலிஸாரை வடக்கிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறியதை நான்கேட்டேன். இதன் மூலம் விஜயகலா மகேஸ்வரன் புலிகளின் கடும்போக்குவாத பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றமை தெளிவாகின்றது.
இவ்வாறு கடும்போக்கு கொள்கையில் பயணிப்பதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. ஆனால் விஜயகலா மகேஸ்வரன் புலிகளின் கடும்போக்குக் கொள்கையில் பயணிப்பது நன்றாகவே தெரிகின்றது என்றார்.








