மஹிந்தவை பாதுகாப்பதற்கு ஐ.ம.சு.வில் சிலர் செயற்பட்டு வருகின்றனர்! ரணில் குற்றச்சாட்டு
மஹிந்த ராஜபக் ஷவை பாதுகாத்து அரசியல் நடத்துவதையே முதன்மையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சிலர் செயற்படுகின்றனர்.
இவர்களுக்கு மக்களின் எதிர்காலம் தொடர்பில் அக்கறையில்லை என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரசிங்க 60 மாதங்களில் புதிய நாட்டை கட்டியெழுப்பும் எமது திட்டத்திற்கு உதவுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் இடம்பெற்ற ஐ.தே.முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரு பிரிவி னர் மக்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காது மஹிந்த ராஜபக் ஷவின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கின்றனர். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கும் சிலர் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிக்காததால் அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.இது அரசியல் ஒழுக்கச் சீர்கேட்டை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த கால தேர்தல்களில் முன்னணிக்கு ஆதரவளித்த சிலர் எமது கூட்டங்களில் கூச்சலிட்டனர். குழப்பங்களை ஏற்படுத்தினர்.
இத்தேர்தலில் இவை தலைகீழாக மாறி மஹிந்தவுக்கு எதிரானவர்களுக்கு அதாவது தமது கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக கூச்சலிட ஆரம்பித்துள்ளனர். இன்று எம்முடன் இவர்களுக்கு தேர்தலில் போட்டியில்லை. அவர்களது கட்சிக்குள்ளேயே மோதல்கள் உருவாகியுள்ளன.
முன்னணியினர் இன்று ராஜபக் ஷவின் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்கின்றனர். ஆனால் நான் மக்களின் எதிர்காலம் தொடர்பாகவே சிந்திக்கின்றேன். இன்றைய “நல்லாட்சியை”, “நாசகார” ஆட்சியென விமர்சிக்கும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வக்கிரமாக விமர்சிக்கின்றார்.
இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர்தான் நடுத்தெருவில் அனாதைகளாக்கப்படுகின்றனர். ஆனால் ஐ.தே.முன்னணி எவரையும் சுதந்திரக் கட்சியினர் என விமர்சிப்பதில்லை.அவர்களை எமது 60 மாதங்களில் புதிய நாடு என்ற திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம். அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் நாம் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே எதிர்வரும் 17ஆம் திகதி நல்லாட்சியின் வெற்றியை உறுதி செய்யுங்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.








