சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்து அப்பாவி மக்களை திசைதிருப்ப வேண்டாம் - கருணாநாயக்க
தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்து அப்பாவி மக்களைத் திசை திருப்பவேண்டாமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் வகையிலான அதிகூடிய அதிகாரப் பகிர்வை தாம் வழங்குவோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கை யில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு விடயத்தில் வடக்கு கிழக்கு இணை ப்பு, சுயநிர்ணய உரிமை, சமஷ்டி போன்ற விடயங்களை உள்வாங்கியுள்ளது. அது தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் சாத்தியமான விடயங்களை மட்டுமே மக்கள் மத்தியில் கூறவேண்டும்.
இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டு நிரந்தர சமாதானம் நிலைபெறவேண்டும். அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் வெ ற்றி கண்டு நாடு புதுயுகம் பெறவேண்டும் என்ற அடிப்படையிலேயே நாம் அன்று முதல் இன்றுவரை செயற்பட்டு வருகின்றோம்.
இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட பல்வேறு விடயங்களை ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகள் மூலம் முன்னெடுத்துள்ளோம்.
உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் ஆரம்பப் பணிகளை மேற்கொள்ளல், மீள் குடியேற்றங்களை உறுதிப்படுத்தி நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை 100 நாட்களுக்குள் முன்னெடுத்தோம். நாட்டில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழும் காலமொன்று உருவெடுத்துள்ளது.
இவ்வாறான நிலையில் வாக்குகளுக்காக சாத்திமற்ற விடயங்களை அப்பாவி மக்கள் மத்தியில் கூறி பின்னர் இந்த நாட்டின் நல்லிணக்கத்தை பாதிப்படையச் செய்யும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது தவறானதாகும்.
நாம் தமிழ் நிம்மதியாக வாழவேண்டும் என்பதையும் அவர்களின் வாழ்க்கை சுபீட்சமாக அமையவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தர சமாதானத்தையே விரும்புகின்றோம். அதன் காரணமாகவே ஒற்றையாட்சிக்குள் அதிகூடிய அதிகாரப் பகிர்வை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம் என்றார்.