மஹிந்தவின் இனவாதத்திற்கு களம் அமைக்கும் சமஷ்டி கோரிக்கை' - ஜே.வி.பி.குற்றஞ்சாட்டு
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் “சமஷ்டி” கோரிக்கை தென்னிலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்தின் இனவாதத்திற்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
தத்தமது அரசியல் தேவைக்காக இனவாதத்திற்கு தூபமிட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் என்றும் அக்கட்சி குறிப்பிட்டது.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். ரில்வின் சில்வா மேலும் குறிப்பிடுகையில்
வட மாகாண சபை ஊடாக தமிழ் மக்களுக்கு எதுவிதமான சேவைகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை. வட மாகாண சபையால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் நலன்புரி என்பன யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்லவில்லை. இதனால் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டனர். இவ்வாறானதோர் சூழ் நிலையிலேயே தேர்தலை இலக்காக வைத்து தமிழ் மக்களை ஒவ்வொரு தேர்தல்களிலும் ஏமாற்றும் வித்தையை கூட்டமைப்பினர் கையில் எடுத்துள்ளனர்.
தேர்தல் காலங்களில் இனவாத ரீதியாக விடயங்களை முன்னெடுக்கும் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறையின் கீழே அதிகாரப்பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது. இக் கருத்து தென்னிலங்கையில் இனவாத சக்திகளான மஹிந்த ராஜபக்ஷ விமல் வீரவன்ச உள்ளிட்ட கூட்டத்தின் இனவாத பிரசாரத்திற்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.
வடமாகாண சபையூடாக மக்களுக்கு எதனையும் செய்யாத கூட்டமைப்பு சமஷ்டி ஊடாக அதிகாரப் பரவலாக்கல் எனக் கூறுகிறது. தெற்கில் ஒற்றையாட்சி வலியுறுத்தப்படுகின்ற நிலையில் கூட்டமைப்பு நாட்டைப் பிரிக்க முயற்சிக்கின்றது என்ற இனவாதம் சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றது.
தத்தமது அரசியல் தேவைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் இனவாதம் விதைக்கப்படுகின்றது. சமஷ்டி, ஒற்றையாட்சி மற்றும் அதிகாரப்பரவலாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது. அனைத்து இனத்தவர்களுக்கும் சமத்துவமான உரிமைகள் வழங்கப்படுவதன் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியும் என்றார்.