Breaking News

சம்பந்தன் தென் இலங்கை அரசியலில் சிக்கிவிட்டாரா?

இலங்கையின் 08ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று காலை நியமிக்கப்பட்டார்.


சுமார் 30 ஆண்டுகளின் பின்னர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் தருணமாக கருதப்பட்டாலும் இரா.சம்பந்தன் தென் இலங்கை அரசியலில் சிக்கிவிட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது.தமிழர்களுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தே தேர்தல் காலத்திலும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குகளைச் சேகரித்து வந்தது.

தேர்தலில் மூன்றாம் சக்தியாக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் நிறுத்தினர்.இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கவுதாக அறிவித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இரா.சம்பந்தனுக்கு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பிலும், சில தமிழ்க் கட்சிகள் தரப்பிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி இரா.சம்பந்தனுக்கு வழங்குவதை சிங்கள இனவாதக் கட்சிகள் சில எதிர்த்துவந்தன.இந்த நிலையில், இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இதனால் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு கையாளப் போகிறது என்பது கேள்வியாக உள்ளது.

அத்துடன், தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தளவிற்கு குரல் எழுப்பப் போகிறது என்ற கேள்வியும் உள்ளது.எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனின் குரல் வலுவடைந்துள்ள போதிலும், அந்தக் குரல் எந்தளவிற்கு ஒலிக்கப் போகிறது என்பது ஒருபுறமிருக்க, இதனால் ஏற்படும் நெருக்கடிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இரா.சம்பந்தனும் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்பது மற்றுமொரு கேள்வியாக இருக்கிறது.

தமிழர் பிரச்சினையை சர்வதேசத்தின் மத்தியில் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் கொண்டுசெல்ல முடியும் என்ற வாதம் ஒருபுறமிருந்தாலும், மேற்குலக நாடுகளுக்கு சார்பான இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இரா.சம்பந்தன் தனது குரலை எங்கு பதிவுசெய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழும்புகிறது.

இவ்வாறு பல சிக்கல்கள் இருக்கின்ற நிலையில் தென் இலங்கை அரசியலில் இரா.சம்பந்தன் சிக்கவிட்டாரா என்ற மிகப்பெரிய கேள்வியே தற்போது இருக்கிறது.