புதிய அரசாங்கம் ஜெயக்குமாரியை மீண்டும் கைதுசெய்தது!
பாலேந்திரன் ஜெயக்குமாரி மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அநுராதபுர கெப்பற்றிக் கொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற களவு ஒன்று சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டு, பதவியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவருடன் தொடர்புகொள்ள தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தியிருந்தபோதும் அது பலனளிக்கவில்லை.
கிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்தில் வைத்து கடந்த 2014 ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஜெயக்குமாரியும் அவரது 13 வயது மகளான விபூசிகாவும் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டிருந்தனர்.கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய அவரது மகள் விபூசிகா, கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமில் ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டார்.
பாலேந்திரன் ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டார் என்ற குற்றசாட்டின்பேரில் இவர் கைது செய்யபடு பின் விடுதலையாகியிருந்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது








