Breaking News

நாளை ஜெனிவா செல்கிறார் மங்கள

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பங்கேற்பதற்காக நாளை ஜெனிவா செல்லும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ,நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹுசேனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், மகேஷினி கொலன்னே, “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் வரும் 14ஆம் நாள் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழு நாளை, ஜெனிவா செல்லவுள்ளது.

இந்தக் குழுவில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளும், மேல் மாகாண ஆளுநரும் இடம்பெறுகின்றனர். ஜெனிவா செல்லும் வெளிவவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்வரும் 14 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமை பேரவையில் உரையாற்றவுள்ளார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்துவார். வரும் 14ஆம் நாள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றி முடித்ததும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உடனடியாகவே புதுடெல்லி செல்லவுள்ளார்.

அங்கு அவர், இந்தியாவுக்குப் பயணம்மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்.” என்றும் தெரிவித்தார்.