Breaking News

ஈழ அகதிகள் திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாப் போராட்டம்!

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் ஐவர் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 3 வருடங்களாக முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை நிபந்தனை அடிப்படையில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.குடும்பத்தினரும் இணைந்து வாழ அனுமதிக்காவிடின் தம்மை கருணைக் கொலை செய்யுமாறு தமிழக அரச அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஈழ அகதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு உளவுத் துறை காவல்துறை அதிபர், க்யூ பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர், திருச்சி இலங்கை அகதி முகாம் தனித்துணை ஆட்சியர் ஆகியோருக்கு அவர்கள் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

தங்கவேல் மகேஸ்வரன், பாலசுப்ரமணியம் சிவனேஸ்வரன், கந்தவனம் மகேஸ்வரன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஞானசௌந்தரம் சுரேஷ்குமார் ஆகிய ஐந்து ஈழ அகதிகள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தாம் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குடும்பம் வறுமையில் வாடுவதாலும் பல வருடங்களாக பிரிந்து வாழ்வதனாலும் தம்மை அகதி முகாமிலோ அல்லது அரசு கூறும் ஏதோ ஒரு இடத்திலோ வாழ அனுமதிக்க வேண்டும் என பல மனுக்களை அனுப்பியதாக ஈழ அகதிகள் கூறியுள்ளனர்.

எனினும் அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கு எதிரான வழக்கு முடிவடைந்த பின்னரே விடுதலை செய்ய முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவித்துள்ள ஈழ அகதிகள் வழக்கு முடிவடைவதற்கு பல வருடங்கள் ஆகலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு இருக்க தாம் எப்போது குடும்பத்துடன் இணைந்து வாழ்வது என அதிகாரிகளுக்கு எழுத்தியுள்ள கடிதத்தில் ஈழ அகதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த நிலையில் தாம் தொடர்ந்தும் குடும்பத்தை விட்டு பிரித்து வைக்கப்படின் எந்தவொரு அர்த்தமும் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிபந்தனை அடிப்படையில் முகாமிலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் அங்கிருந்தவாறே வழக்கை முடிப்போம் எனவும் ஈழ அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் வழங்கப்படும் தண்டனையை மனப்பூர்வமாக ஏற்பதற்கு தாயராகவுள்ளதாகவும் அவர்களின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தம்மை விடுதலை செய்ய இயலாத பட்சத்தில் தொடர்ந்தும் வதைக்காமல் கருணைக்கொலை செய்யுமாறும் ஈழ அகதிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.