ஜெனிவாவில் எதிரி பிரசன்னம் வழக்காளிகளுக்கு என்ன நடந்தது!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் 14ந் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் விவாதங்கள் நடக்க இருக்கின்ற நிலையில் இலங்கை அரசின் உயர்மட்டக் குழு ஒன்று ஜெனிவாவுக்குச் சென்று கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள மாட்டாது என அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாததற்கான காரணம் என்ன? என்பது பற்றி எதுவும் கூறவில்லையாயினும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலை வர் பதவி கொடுக்கப்பட்டதோடு ஜெனிவாக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வது அவ்வளவு நல்ல தல்ல என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது.
இதே சமயம் வடக்கு மாகாண சபை உறுப்பினர் களும் உத்தியோகபூர்வமாக ஜெனிவாவுக்குச் சென்று மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள முடியாது.தேவையாயின் தனிப்பட்ட முறையில் அங்கு சொல்ல முடியும் என்ற அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவில் வழக்காளி நீதிமன்றுக்கு செல்லாமலும் எதிரி நீதிமன்றில் பிரசன்னமாக இருப்பதன் மூலமும் வழக்குத் தள்ளுபடியாவதற்கு வாய்ப்பு உண்டு. நீதிமன்றில் உள்ள வழக்கை தள்ளுபடி செய்வதற்கு வழக்காளி விரும்பினால், அதற்காக இரண்டு முறைகளைப் பின்பற்ற முடியும். அதில் ஒன்று; மன்றில் சமாதானமாகப் போவது. இரண்டாவது; வழக் காளி குறித்த வழக்குத் தவணைகளுக்கு நீதிமன்றில் பிரசன்னமாகாமல் விடுதல்.
இந்த இரண்டு நடைமுறையில் முதலாவது முறையான இணங்கிப் போவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வது விமர்சனத்தை ஏற்படுத்தும்.எனவே ஜெனிவாவுக்குப் போகாமல் விடுவதே பொருத்தம் என்று கூட்டமைப்பினர் கருதியிருக்க லாம்.
எது எப்படியாயினும் கூட்டமைப்புக் கூறுவது போல சர்வதேச விசாரணை முடிந்து விட்டால், அந்த அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வெளியிடப்படும் போது தமிழ்த் தரப்பு இருப்பது நல்லதல்லவா? அண்மையில் பாராளுமன்றத் தேர்தல் நடந்த போது வாக்கு எண்ணலிலும் விருப்புவாக்குக் கணக்கெடுப்பிலும் ஊண் மறந்து உறக்கம் மறந்து இருந்த கூட்டமைப்பினர், கொன்று ஒழிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில்; ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்ப்பு வாசிக்கப்படும் போது அங்கு பிரசன்னமாகாமல் இருப்பது எந்த வகையில் நியா யமாகும்?
பரவாயில்லை, இலங்கையில் வாக்களித்த மக் களுக்கான பரிசு தாஜ்மகால் கட்டிய சிற்பிக்கு மன் னன் சாஜகான் வழங்கிய பரிசாக இருப்பதுதான் வழமை என்பதால் அது பற்றிய கவலையை விட்டு விடலாம்.
ஆனால் எங்களின் நம்பிக்கைக்குரிய புலம் பெயர் தமிழர் அமைப்புகள் ஜெனிவாவில் நடை பெறும் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் ரில் விழிப்பாக இருக்கவேண்டும். கூடவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் ஜெனிவாவுக்குச் சென்று நிலைமைகளை அவதானிக்க வேண்டும் என்பது தமிழ்ப் பற்றுக்கொண்டவர்களின் பேரவா.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்








