Breaking News

யுத்த காலத்தில் இடம்பெற்ற 16 கொலைச் சம்பவங்கள் தொடர்பான அறிக்கை!

யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் கொலை செய்யப்பட்ட 16 சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக 2006ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மற்றும்


காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக 2013ஆம் ஆண்டு நியமிக்கபட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசாங்கம் ஆயத்தமாகின்றது.

முதலாவதாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, உதாலகம ஆணைக்குழு என்ற பெயருடனும், இரண்டாவதாக மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு என்ற பெயருடனும் செயற்பட்டு வந்தன.

உதாலகம ஆணைக்குழுவின் அறிக்கை 2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும், அவை தொடர்பில் இதுவரையில் பகிரங்கமான விளக்கம் எதையும் தரவில்லை.

காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள போதிலும், அதனை தற்போதைய ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்காக திகதி ஒன்றை கோரியுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் நிஷ்ஷங்க உதாலகம தலைவராக செயற்பட்ட முதலாவது ஆணைக்குழுவிடம் கொலை செய்யப்பட்ட 16 சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பணி ஒப்படைக்கப்பட்டன.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை, மூதூரில் 17 உதவி தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை, கெப்பட்டிக்கொல்லாவையில் சாதாரண மக்கள் 68 பேரின் கொலை, பயிலுநர் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் 98 பேரின் கொலை ஆகியவைகள் அவற்றில் உள்ளடக்கப்படும்.

எப்படியிருப்பினும் நிதிகள் ஒழுங்கான முறையில் வழங்கப்படாமை, சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு தொடர்பில் சான்றிதழ் வழங்கப்படாமை குறித்து அரசாங்கத்திற்கு எதிராக, குறித்த ஆணைக்குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பின்னர் மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்புகள் பல குறித்த விசாரணை நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு அனுமதி கோரியிருந்தன. எனினும் பின்னர் அவர்களில் அவற்றில் இருந்து விலகிவிட்டனர்.

இறுதி யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராயும் பணியினை 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டன.இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளையே ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்கு ஆயத்தமாகின்றனர்.