ஜெனீவா விவகாரம்! கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே குழப்பம்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரின் போது இடமட்பெறும் ஏனைய சிறிய கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணைiயாக மாற்றவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கு செல்லவுள்ளனர். ஆனால் ஜெனீவா சென்று சர்வதேச விசாரணையை வலியுறுத்துவது தொடர்பாக கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் ஒன்று சோந்து தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என்றும் தனித்தனி கட்சியாகவே ஜெனீவா செல்ல முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜெனீவா மனித உரிமை பேரவையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் யாரும் பங்கு கொள்ளமுடியாது என்றும் ஆனால் அங்கு நடைபெறும் ஏனைய சிறிய கலந்துரையாடல்களில் பங்குபற்றி தமிழ் மக்கள் சார்பான கருத்துக்களை முன்வைக்கலாம் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.
இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கடசியின் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் ஏற்கனவே ஜெனீவா சென்றுள்ளார். மற்றும் ஈபிஆர்எல்எப் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ இயக்கத்தின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், புளொட் இயக்கத்தின் சார்பில் தர்மலிங்கம் சித்தாத்தன் ஆகியோரும் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோரும் எதிர்வரும் 18 அல்லது 19 ஆம் திகதிகளில் அங்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனாலும் செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன் ஆகியோர் ஜெனீவா செல்வது குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஜெனீவா செல்வது தொடர்பாக கூட்டமைப்பின் நான்கு கட்சிகளின் கூட்டத்திலோ அல்லது கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலோ தீர்மானங்கள் எதவும் எடுக்கப்படவில்லை என்றும் சர்வதேச விசாரணையா அல்லது உள்ளக விசாரணையா என்பது குறித்த விடயங்களிலும் கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.