ஐ.நா அறிக்கை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து என்ன?
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்னகள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் நடத்தப்படும் கலப்பு விசாரணையை ஏற்க முடியாது என்று, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,
பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் இலங்கையில் தான் வசிக்கிறார்கள் என்பதால் விசாரணையை இலங்கையில் நடத்துவதே சரியாக இருக்க முடியும். விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை, நாம் ஐ.நா மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புகளில் வலியுறுத்தியிருந்தோம்.
எமது கருத்தை பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா அறிக்கை வெளியாகியுள்ளது. அதேவேளை, ஐ.நா அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் விரைவாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.” என தெரிவித்தார். இததேவேளை, இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
எனவே பிரேரணையை நல்ல விதமாக கொண்டு வருவதற்கும், மனித உரிமைகள் ஆணையகத்தின் அங்கத்துவ நாடுகள் அதனை எதிர்க்காத வகையில் நிறைவேற்றுவதற்கும் நாங்கள் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அறிக்கை வலுவானதாக இருந்தாலும் அதில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்துலக நீதிபதிகள், வழக்கு நடத்துனர்களை உள்ளடக்கியதாகவும், அனைத்துலக சட்டங்களை ஏற்றுக் கொள்ளும் வகையிலான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு ஒத்துக்கொள்ளும் வகையில் பிரேரணை அமையவேண்டும்.
அதற்கு எங்களிடமுள்ள புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஐ.நா விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கலப்பு நீதிமன்ற விசாரணை பொறிமுறை போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு எவ்வகையிலும் பொருத்தமானதாக அமையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கான சட்டம், அதி உயர் தொழில்நுட்பம் இல்லாத நிலையிலும் சிங்கள பெளத்த தீவிரவாதிகளின் அழுத்தம் மற்றும் சாட்சியங்களை பாதுகாக்க முடியாமைக் காரணமாக, கலப்பு பொறிமுறைக்கான களமாக சிறிலங்கா அமைவது நடைமுறை சாத்தியமாகாது.
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு கலப்பு நீதிமன்ற விசாரணையை விடவும் அனைத்துலக நீதிமன்ற விசாரணையே பொருத்தமானதாக இருக்கும். இல்லையேல் இந்த கலப்பு பொறிமுறை ஜெனிவா, பிரேஸில் போன்ற வெளிநாடொன்றில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கலப்பு நீதிமன்ற விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்படுமாயின் அது நிச்சயம் சுதந்திரமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அறிக்கையின்படி கொலைககளுக்கு காரணமான ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கு சிங்கள, பெளத்த தீவிரவாதிகளிடமிருந்து பாரிய அழுத்தம் வருவது நிச்சயம்.
போர்க்குற்றம் அல்லது மனிதாபிமான குற்றம் ஒன்றுக்கு எதிராக விசாரணை செய்வதற்கு இலங்கையில் சட்டம் இல்லை. இதற்காக புதிய சட்டம் இயற்றப்போவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். இதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என்பதால் இது எந்த வகையிலும் உள்ளக விசாரணையை நடத்துவதற்கோ அல்லது கலப்பு பொறிமுறையை இலங்கையில் முன்னெடுப்பதற்கோ பொருத்தமானதாக அமையாது.
சனல் 4 ஆவணப்படங்கள உண்மையானவையா போலியாக தயாரிக்கப்பட்டவையா என்பதை அறிந்து கொள்ளும் தொழில்நுட்ப வசதிகூட இலங்கையில் இல்லாத நிலையில் வெளிநாட்டையே நாம் நம்பியிருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் எவ்வாறு இலங்கையில் விரிவான விசாரணையை முன்னெடுக்க முடியும்? கலப்பு பொறிமுறையொன்று இலங்கையில் முன்னெடுக்கப்படுமாயின் சாட்சியங்களை பாதுகாக்க முடியாத நிலை உருவாகும் என்பதனால் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அனைத்துலக விசாரணையே பொருத்தமானதாக அமையும் என்று குறிப்பிட்டார்.