பரிந்துரைகளை அமுல்படுத்த பிரேரணை நிறைவேற்றுங்கள்! சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்றவேண்டுமென ஐ.நா. மனித உரிமைப் பேரவை பிரேரணையொன்றை நிறைவேற்றவேண்டியது அவசியமாகும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி சர்வதேச உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளவேண்டுமென உறுப்பு நாடுகள் இலங்கையை வலியுறுத்த வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்றைய தினம் உரையாற்றிய மன்னி்ப்புச் சபையின் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்துவதாக வழங்கி வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றவேண்டும். இது தொடர்பில் பரந்தளவிலான ஆலோசனைகள் அவசியம். பொறுப்புக்கூறல் செயல்பாட்டில் பாதிக்கப்படுவர்கள் உள்ளடக்கப்படுவது அவசியமாகும். இவை அர்த்தமுள்ள நடவடிக்கைகளாக இருக்கவேண்டும்.
அதுமட்டுமன்றி அரசாங்கம் உண்மையைக் கண்டறிதல், மற்றும் நீதி, நியாயம், இழப்பீடு வழங்குதல் போன்ற செயற்பாட்டில் அரசாங்கம் பொதுமக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ளவேண்டியதும் அவசியமாகும்.
குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கும் செயற்பாடு நிறுத்தப்படவேண்டும். குறிப்பாக திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் பாதுகாப்புப் பிரிவினரால் கொல்லப்பட்டமை, மற்றும் அரசசார்பற்ற நிறுவனத்தின் 17 பேர் மூதூரில் கொல்லப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டுமன்றி அவசியமான சட்ட நிறுவனம் சார் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவேண்டும்.
அதுமட்டுமன்றி கடத்தல்கள், தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதுடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படவேண்டும். இலங்கை உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளது. இதில் ஐ.நா. மனித உரிமை விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் கவனத்தில் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இவை தொடர்பில் சர்வதேச அவதானமும் தொழில்நுட்ப உதவியும், கண்காணிப்பும் இருக்கவேண்டியது அவசியமாகும். அரசாங்கம் இந்த விடயத்தில் தொழில் நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள இணக்கம் தெரிவிக்கவேண்டும்.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்றவேண்டுமென ஐ.நா. மனித உரிமை பேரவை பிரேரணையொன்றை நிறைவேற்றவேண்டியது அவசியமாகும். அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமைபேரவைக்கு தொடர்ச்சியாக அறிக்கைகளை முன்வைப்பதற்கும் பணிக்கப்படவேண்டும். உறுப்பு நாடுகள் சர்வதேச உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளவேண்டுமென இலங்கையை வலியுறுத்த வேண்டும்.