Breaking News

கலப்பு நீதிமன்ற விவகாரம் – நாடாளுமன்றில் விவாதம் நடத்தக் கோருகிறார் விமல்

போர்க்குற்றங்கள் குறித்து கலப்பு விசாரணை நடத்தக் கோரும், ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், மனுவொன்றைக் கையளித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச.

நேற்றுக் கையளிக்கப்பட்ட இந்த மனுவில், இலங்கை அரசபடைகளுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

கலப்பு நீதிமன்றம் என்ற பெயரில், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் கிளை ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக,  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜெனிவாவில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை அரசாங்கம் கலப்பு நீதிமன்றத்தை் அமைக்கும் நகர்வுக்கு ஏற்கனவே இணங்கியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இது ஒரு தீவிரமான விவகாரம். ஒரு நாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட ஒரு நீதிமன்றத்தை, காலனித்துவ ஆட்சியில் தான் அமைக்க முடியும்.

எனவே கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் யோசனைக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக, நாளை செவ்வாய்கிழமை நாடாளுமன்றம் கூடும் போது, இந்த விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.