Breaking News

நாளை நியூயோர்க் செல்கிறார் மைத்திரி

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில், ஐ.நா பொதுச்சபையின் 70ஆவது அமர்வு எதிர்வரும் 25ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரி்பால சிறிசேன எதிர்வரும் 30ஆம் நாள் உரையாற்றவுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நாளை நியூயோர்க் செல்லவுள்ளனர்.

இந்தக் குழுவில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, திறன் விருத்தி, தொழிற்பயிற்சி் அமைச்சர் மகிந்த சமசிங்க மற்றும், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ உள்ளிட்ட 30 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதன் போது, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை தொடர்பாகவும், ஐ.நா அமைதிப்படையில் இலங்கை படையினரை அதிகளவில் சேர்த்துக் கொள்வது தொடர்பாகவும் அமெரிக்க அதிபருடன் இலங்கை ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.