ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகின்றார்
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வோல்ட்டர் ஸ்டெய்ன்மியர் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்.
இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.இந்த சந்திப்புக்களின்போது இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது .
இன்றுகாலை 10.30 மணியளவில் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வோல்ட்டர் ஸ்டெய்ன்மியர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் வட பகுதிக்கும் விஜயம் செய்யவுள்ள ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தையும் பார்வையிடவுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டின் பின்னர் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் இம்முறையே முதற்தடவையாக விஜயம் செய்கின்றார்.