பக்கச்சார்பாகவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பயங்கரவாதிகளுக்கு பக்கச்சார்பானதாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதில் அடங்கியுள்ள விடயங்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது என அமைச்சர் சம்பிக்க ரண வக்க தெரிவித்துள்ளார்.
எமது நாட்டுக்கு எதிராக பொருளாதாரத்தடைகள் விதிக்கப் படலாம். ஆணை பிறப்பித்தவர்களின் பெயர்கள் வெளியிடப்படலாம் என்ற அச்சம் இன்று நீங்கியுள்ளது. அவ்வாறு எதுவுமே அறிக்கையில் இடம்பெறவில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட் டுள்ளார்.
\
மேல் மாகாண சபை அமைச்சராக பதவியேற்ற பின்னர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க மாகாண அமைச்சில் தனது கடைமைகளை அண்மையில் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது
ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பாக நாட்டு மக்கள் மத்தியில் விவாதம் உருவாகியுள்ளது.இவ் அறிக்கை பக்கச் சார்பற்ற அறிக்கையல்ல என்பதைக் கூற வேண்டும்.இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் உண்மையான தகவல்கள் இதில் வெளியாகவில்லை.
நாடு தொடர்பில் காணப்பட்ட, சில பிழையான அவதானிப்புக்களுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைத்தது. யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் யுத்தத்திற்கு ஆணை பிறப்பித்த 42 பேரின் பெயர்கள் தம்மிடம் இருப்பதாகவும், அவர்களின் பெயர்கள் வெளியிடப்படுமென்ற அச்சமும் சந்தேகமும் நிலவியது.
நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் அதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சந்தேகமும் அச்சமும் நிலவியது.அது மட்டுமல்லாது படையினர் அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் வைத்து கைது செய்யப்படவுள்ளனர் என்றும் சந்தேகம் நிலவியது.இவ் அறிக்கைபயங்கரவாதிகளுக்கு பக்கச் சார்பான விடயங்களை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம் அனைத்தும் நிறைவேற்றப்படமாட்டாது. இந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டும். இது தொடர்பில் விவாதம் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறலாம்.
நாட்டின் தேசிய நல்லிணக்கம் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படாத விதத்தில் இவ்வறிக்கை நிறைவேறும் என எதிர்பார்க்கின்றோம்.
ஐ.நா. சபை மற்றும் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகளையே நிறைவேற்றுவதற்கு அரசு கடமைப்பட்டுள்ளது. எமது நாட்டில் பலமான ஜனநாயக சட்ட. நீதித் துறை செயல்படுவதை எதிர்காலத்தில் எம்மால் நிரூபிக்க முடியும் என்றார்.