தொகுதி முறையிலேயே உள்ளூராட்சி தேர்தல் - அமைச்சரவையில் தீர்மானம்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை தொகுதி மற்றும் விகிதாசார முறைமையில் அமைந்த புதிய தேர்தல் முறைமையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணய செயற்பாடுகளில் ஏதாவது அநீதிகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் எந்த முறைமையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ள நிலையிலேயே புதிய முறைமையில் நடத்துவதற்கு தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே புதிய முறைமையில் நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மேலும் எல்லை நிர்ணய செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவில் பைசர் முஸ்தபா கபீர் ஹஷீம், ரவூப் ஹக்கீம் ,மனோ கணேசன் ,துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறைமையில் நடத்தப்படவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் அதே தினத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது புதிய தேர்தல் முறைப்படி நடத்தப்படவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இறுதியில் தற்போது புதிய முறையில் தேர்தலை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்றங்களுக்கான புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதுவரை அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை.