மஹிந்த விடுத்த கோரிகைக்கு ராஜித்த பதில்
எவன்காட் சம்பவம் குறித்து தொடர்ந்தும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலப்பின நீதிமன்றத்திற்கு அல்லாது உள்ளகப் பொறிமுறைக்கு பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நேற்றையதினம் இலங்கை தொடர்பிலான மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கையை நிராகரிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் வினயபோது, ராஜபக்ஷவினரால் ஏற்படுத்தப்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகள் தமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் தன்னால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மக்களின் குறைகளை கேட்கும் ஒன்று மட்டுமே என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த கருத்தை தான் நிராகரிப்பதாகவும் ராஜித்த இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதும், இறுதி இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் உலகில் மரண தண்டனையை அமுல்படுத்தியதால் குற்றங்கள் குறைவடைந்த எந்தவொரு நாட்டையும் தான் அறிந்திருக்கவில்லை என இங்கு குறிப்பிட்ட ராஜித்த சேனாரத்ன, முன்னதாக இவ்வாறானதொரு யோசனை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.
எனினும் தனது வாக்கை அப்போது அதற்கு எதிராகவே பயன்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.