Breaking News

மன்னாரில் இரண்டாவது நாளாகவும் தனியார் பேரூந்துகள் பணிப்பகிஸ்கரிப்பு

மன்னாரில் இரண்டாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை(25) மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் பாடசாலை மாணவர்கள்,அரச தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பேரூந்து ஒன்றின் மீது கடந்த புதன் கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத்தாக்குதல் காரணமாக குறித்த பேரூந்து கடும் பாதீப்புக்கு உள்ளாகியதோடு அதன் சாரதி மற்றும் பெண் பயணி ஆகிய இருவரும் காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் பாதீப்புக்குள்ளான சாரதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மன்னார் தனியார் பேரூந்து ஒன்றின் சாரதியை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும் கைது செய்யப்பட்ட மன்னார் தனியார் பேரூந்து சாரதிக்கும் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சாரதி கைது செய்யப்பட்டமையினை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் நேற்று விhழக்கிழமை(24) காலை முதல் மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்திற்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்திற்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாத நிலையில் பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பாதீக்கப்பட்டுள்ளனர். அரச தனியார் அலுவலகங்களுக்கு கடமைக்குச் செல்லும் பணியாளர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்க முகம் கொடுப்பதை காணக்கூடியதாக உள்ளது. எனினும் மன்னார் அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.