வடக்கு விவசாய அமைச்சினால் வாழ்வாதார பொருட்கள் வழங்கி வைப்பு (படங்கள் இணைப்பு)
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண விவசாய அமைச்சரின் 2015ஆம் ஆண்டுக்குரிய பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து ரூபா 3 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உரிய பயனாளிகளுக்குப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.
பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதி பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், சமூக அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற நிதி ஒதுக்கீடு ஆகும். இவற்றின் அடிப்படையில், அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாடசாலைகள், முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்றவற்றுக்குக் கணனிகள், ஒலிபெருக்கி சாதனம், தொலைக்காட்சிப்பெட்டி, சங்கீத உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், பாதணிகள், தளபாடங்கள், நூல்கள் மற்றும் சீமெந்து போன்ற பொருட்களும், தனிப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவியாக தண்ணீர்ப்பம்பி, மீன்பிடி உபகரணங்கள், துவிச்சக்கரவண்டிகள், தையல் இயந்திரங்கள், மரவேலை இயந்திரம், சமையல் தொழில் உபகரணங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
வாழ்வாதார உதவியாக கோழிவளர்ப்பு, நல்லின பசு மற்றும் ஆடு வளர்ப்பில் ஈடுபடுவதற்கான உதவி கோரிய விண்ணப்பங்களில் இருந்து உரிய பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான உதவிகள் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் கலாநிதி க.சர்வேஸ்வரன், பிரதம செயலாளர் அ.பத்திநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன் ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்குப் பொருட்களை வழங்கி வைத்தனர்.








