Breaking News

புலிகளுக்கு உதவியோர் தப்பிக்க முடியாது : சம்பிக்க

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட போதிலும் அவர்களின் போராட்டங்களுக்கு பலவகையிலும் உதவியவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முடியாது என மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அமெரிக்காவின் இரட்டைகோபுரம் தீவிரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் ஒருவர்கூட சம்பவத்தில் உயிர்பிழைத்திருக்கவில்லை.

எனினும் அந்த தாக்குதலை மேற்கொள்ள நிதி ரீதியாக, அரசியல் ரீதியாக, ஆலோசனை வழங்கிய மற்றும் தைரியமூட்டியவர்களுக்கு     எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்துவிட்டார் என்றும், விடுதலைப் புலிகளின் தளபதிகளான பொட்டு அம்மான், தீபன், ஜெகன், விதூசா ஆகியோர் மரணித்துவிட்டார்கள் எனத் தெரிவித்து அவர்களின் போராட்டத்திற்கு நிதி, வாகனம் வழங்கியோர், தைரியமூட்டியோர், ஆலோசனை வழங்கியோர், அவர்களுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் ஆகியோருக்கு சட்டத்தின் முன் விடுதலையில்லை.

அவர்கள் தங்களுக்குரிய அடிப்படை உரிமை பற்றி பேச முடியாது.

ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக, ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்கள் யார்? அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே மேற்கொண்டது என்பதை தெளிவாக கூற முடியும்.

சமாதானத்திற்கு எதிராக செயற்பட்டவர்கள் யார்? அதனையும் தமிழீழ விடுதலைப் புலிகளே செய்தார்கள்.

யார் போர்க் குற்றம் செய்தது? இன்று புதுமாத்தளனில் இடம்பெற்றதை பேசுகிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் தமிழ் மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த ஸ்ரீலங்காவிலுள்ள 200 இலட்சம் மக்களையும் பணயக் கைதிகளாகவே அவர்கள் வைத்திருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி சில தமிழ் அமைப்புகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நியாயம் பேசுகிறார்கள். எனினும் விடுதலைப் புலிகள் இல்லாததினால்தான் அவர்களால் தேர்தலில் போட்டியிடவும், கருத்து கூறவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், வடமாகாண முதலமைச்சராகவும் முடிந்தது – என்றார்.