Breaking News

போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தகவல்

போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலைபாட்டையே இந்தியா எடுக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் சூசகமாக தெரிவித்துள்ளது. 

இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உறிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஈழத்தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போர்க்குற்றம் குறித்து ஐநா மனித உறிமை ஆணையர் விசாரணை அறிக்கையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை ஜெனீவா மாநாட்டில் தாக்கல் செய்துள்ளது. 

இத்தீர்மான விவாகரத்தில் இந்தியா எடுக்க உள்ள நிலைபாடு பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி சிறிசேனவை, அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப், போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளக்கூடிய அந்நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விசாரணை அமைப்பை உருவாக்கவே இந்தியா ஆதரவு அளிக்கும் என்றார். 

போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என இலங்கை திரும்பத் திரும்ப கூறி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ளும் முடிவை இந்தியா ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால், சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்தாது என தெரிகிறது. இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு நேர்மாறான முடிவை மத்திய அரசு எடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.