ஐ.நா அறிக்கையை எதிர்ப்பவர்களுக்கு விளக்கமளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்?
இலங்கை தொடர்பிலான ஐ.நா அறிக்கை தொடர்பில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை அலரிமாளிகைக்கு அழைத்து விளக்கமளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா அறிக்கை வெளியானது தொடக்கம் இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இவ்வாறான அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை அழைத்து ஜெனீவா அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்ட வாய்ப்பு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்திற்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகள், இயக்கங்கள், தொழில்துறை வல்லுனர்கள் ஆகியோரை அலரிமாளிகைக்கு வரவழைத்து ஜெனீவா அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமரின் ஜப்பான் சுற்றுப் பயணத்தின் பின்னர் இந்த தெளிவூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையின் பரிந்துரைகளை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்றுமுந்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் மங்கள சமரவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தாக குறிப்பிடப்படுகின்றது. இந்த யோசனையானது, இலங்கையை பொறுத்தவரை வெற்றியானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பல வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தனிமைப்பட்டிருந்தது. எனினும் தற்போது அந்த தனிமை உடைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் மனித உரிமைகள் பேரவையில் யோசனை ஒன்றின்மூலம் வெற்றி கண்டதாக அன்றைய அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்ட போது அதனால் சபையின் இணக்கத்தை எட்ட முடியவில்லை.
எனினும் 2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் மூலம் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகள் மேம்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








