மைத்திரி இன்று 10 நாடுகளின் அரச தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை
ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) 10 நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி சிமொனிட்டா சொமாருகாவுடன் ஜனாதிபதி இன்றைய தினம் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான விசேட சந்திப்பொன்றிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் பீட்டர் மவுரேவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் ஐ.நா பொதுச் சபையின் அடுத்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி ஜேகொப் சூமா வழங்கும் விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி இன்றிரவு கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30 ஆம் திகதி உரைநிகழ்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








