நாட்டைப்பிரிக்கும் வகையில் கூட்டமைப்பு ஜெனிவாவில் கருத்து
நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை தடுக்க ஜனாதிபதியும் பிரதமரும் செயற்படும் போது நாட்டை பிரிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. ஒரு கூட்டணிக்குள் எவ்வாறு இரண்டு செயற்பாடுகள் இடம்பெறமுடியும் என்று தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார்.
சர்வதேசத்தின் தேவைக்காக அரசாங்கமும் புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை அரசாங்கம் கையாளும் முறைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. யுத்தம் முடிவடைந்ததில் இருந்து தொடர்ச்சியாக சர்வதேசத்தினால் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் எமது அரசாங்கம் இந்த விடயத்தில் மோசமாக செயற்பட்டதாகவும் இந்த கலப்பு அரசாங்கம் சர்வதேச சவால்களை சரியாக கையாள்வதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த கூற்றை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கைக்கு எதிராக சர்வதேச சதித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்ட போது எமது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச சதித்திட்டத்தை இந்நாட்டுக்குள் அரங்கேற்ற இடமளிக்கவில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நாம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்தோம். இலங்கையில் முடிவுக்கு கொண்டுவந்த ஆயுத கலாசாரத்தை மீண்டும் தலைதூக்கவிடாது தடுத்து தொடர்ந்தும் நாட்டை பாதுகாப்பாக வைத்திருந்தோம். ஆனால் இன்று நாட்டின் நிலைமை மீண்டும் மாறியுள்ளது. நாட்டில் ஆயுத கலாசாரம் இல்லாவிட்டாலும் அரசியல் ரீதியில் மீண்டும் பிரிவினைக்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்று ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை தடுக்க ஜெனிவாவில் செயற்படும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜெனிவாவில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஒன்றாக செயற்பட்டவர்கள் மீண்டும் நாட்டை பிளவுபடுத்தும் வேலையினை ஆரம்பித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதுமே நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளும் என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரண்டு தரப்புமே திட்டமிட்டு காய் நகர்த்துகின்றனர் என்பதே உண்மையாகும்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேவையை பூர்த்திசெய்யும் நோக்கத்தில் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. மறுபுறம் புலம்பெயர் புலிகளின் தேவையை பூர்த்திசெய்யும் வகையிலும் நாட்டில் ஒரு பிளவினை ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டார்.








