ஐ.நா. அறிக்கை பரிந்துரைக்கு நிகரானதாக அமெரிக்காவின் பிரேரணை அமையவில்லை
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்,யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்க அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய விசாரணை பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு,
முன்னதாக வடமாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள படையினர் அகற்றப்பட்டு சாட்சியங்களுக்கான பூரண பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு ஐ.நா.வின் கண்காணிப்பு நிறுவனங்கள் அமைக்கப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்
அதேநேரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்ட விசாரணைப் பொறிமுறைக்கு நிகரானதாக தற்போது அமெரிக்க அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேணையில் கூறப்பட்டுள்ள பொறிமுறையை கருதமுடியாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வௌியிட்ட அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி அமெரிக்கா அனுசரணையுடன் கடந்தவாரம் வெ ளியிட்ட நகல் பிரேரணை வரைபில் காணப்பட்ட 26 பந்திகள் 20 பந்திகளாக குறைக்கப்பட்டு் திருத்தங்களுக்குள்ளாக்கப்பட்ட புதிய பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வௌியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டுமென தமிழரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது. தேர்தல் மேடைகளிலும் அவ்விடயமே வலியுறுத்தப்பட்டது. அதற்கே மக்கள் தமது ஆணையையும் வழங்கினார்கள்.
எனினும் அண்மையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் மற்றும் புதிய அரசாங்கத்தின் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கி கலப்பு விசாரணை பொறிமுறையூடாக சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமெரிக்க அனுசரணையிலான முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் தற்போது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொதுநலவாய மற்றும் வௌிநாட்டு நீதிபதிகள் , விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. இவ்விசாரணைப் பொறிமுறையானது ஐ.நா.அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்ட கலப்பு விசேட நீதிமன்றத்திற்கு நிகரானதாக காணப்படவில்லை.
எனினும் இதனை நாம் நிராகரிக்கவில்லை. அதில் கூறப்பட்ட விடயங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றோம். அதேநேரம் குறித்த விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுவதற்கு முன்னதாக வடமாகாணத்திலிருந்து படையினர், புலானாய்வாளர்கள் வெளியேற்றப்படவேண்டும்.
வடமாகாணத்தில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொள்ளச் செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு மேலாக வேறுபட்ட புலனாய்வாளர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் தருணங்களில் நிச்சயமாக சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் அல்லது இவர்களுக்கு மத்தியில் சாட்சியாளர்கள் சாட்சியமளிப்பதற்கு முன்வரமாட்டார்கள். ஆகவே அவ்வாறான சூழல் முற்றாக மாற்றப்படவேண்டும்.
எனவே தான் வடமாகணத்தில் உள்ள படையினர்கள் வெளியேற்றப்பட்டு குறித்த விசாரைணைப் பொறிமுறை எவ்விதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படாது சுயாதீனமாக முன்னெடுக்கப்படவேண்டும். மேலும் இலங்கையில் சாட்சியங்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் திருப்திகரமானதாக இல்லை. அவை தொடர்பாகவும் கவனமெடுக்கவேண்டியுள்ளது.
அதேநேரம் உள்நாட்டில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது பலதரப்புக்களால் அழுத்தங்கள் அளிக்கப்படும் என்பதை மறுதலிக்க முடியாது. இலங்கை அரசாங்கத்ததினால் உள்ளக விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்க முடியாது. எனவே தான் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படும்போது வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட குறிபிடத்தக்க பிரதேசங்களில் ஐ.நா கண்காணிப்பு அலுவலங்கள் நிறுவப்படவேண்டும். அதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உறுதிசெய்யப்படும். இவ்விடயங்கள் தொடர்பாக ஜெனீவாவில் தங்கியுள்ள தாம் பல்வேறு தரப்பினருக்கும் எடுத்துரைக்கவுள்ளோம் என்றார்.








