மஹிந்தவிற்கு எதிராக சாட்சியமளிக்கத் தயாராகும் சஜின் வாஸ்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் அரச தரப்பு சாட்சியாளராக மாறி சாட்சியமளிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முக்கிய விசாரணைகளில் அரச தரப்பு சாட்சியாளராக மாறுவதற்கு சஜின் வாஸ் குணவர்தன இணக்கம் வெளியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான நிதிமோசடிகள் குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களை வழங்க சஜின் இணக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் சில வாரங்களில் கடந்த அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சில விசாரணைகள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு மிக முக்கியமான கொடுக்கல் வாங்கல்களின் போது இடம்பெற்ற மோசடிகள் பற்றிய விபரங்களை சஜின் வாஸ் குணவர்தன வெளியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.








